திருச்சி அருகே கிணற்றில் மினி வேன் கவிழ்ந்து பலியான 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: திருச்சி அருகே கிணற்றில் மினி வேன் கவிழ்ந்து பலியான 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். துறையூரில் நிகழ்ந்த விபத்தில் இறந்த 8 பேரில் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 என முதல்வர் அறிவித்துள்ளார். 


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எஸ்.எஸ் புதூர் பகுதியில் நேற்று, 22 பேருடன் வந்த மினிவேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. திருமனூர் அருகே சாலை வளைவில் திரும்பியபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், ரோட்டில் தாறுமாறாக ஓடிய மினிவேன், அருகில் தண்ணீர் இல்லாத 70 அடி கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. 


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர், போலீசார் கிராம மக்களின் உதவியுடன் கிணற்றில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 8 பேர் பலியாகினர். 


இந்நிலையில், இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது தவிர பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்குவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.