ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம்; தமிழகத்தில் 6 இடம்
தமிழகம் உட்பட மொத்தம் நாடு முழுவதும் 17 மாநிலங்களை சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.
புது டெல்லி: தமிழகம் உட்பட மொத்தம் நாடு முழுவதும் 17 மாநிலங்களை சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுதொடர்பாக ஒரு அறிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் மகாராஷ்டிராவில் ஏழு, ஒரிசாவில் 4, தமிழ்நாட்டில் 6, மேற்கு வங்காளத்தில் 5, ஆந்திரா 4, தெலங்கான 2, அஸ்ஸாம் 3, பீகார் 5, சத்தீஸ்கர் 2, குஜராத் 4, ஹரியானா 2, ஹிமாச்சல் பிரதேசம் 1, ஜார்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3, மணிப்பூர் 1, ராஜஸ்தான் 3, மேகாலயா 1 என மொத்தம் 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான காலியிடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதாவது ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், டி.கே.ரங்கராஜன் மற்றும் திருச்சி சிவா ஆகியோரின் பதவிகாலம் நிறைவடையகிறது.
இதில் சசிகலா புஷ்பா ராஜ்யசபா எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட்டது போது, அவர் அதிமுகவில் இருந்தார். தற்போது பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனுடன் அதிமுக-வை சேர்ந்த மூன்று பேர், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் ஆறு பேரின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.
55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 6 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும். வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாள் மார்ச் 13 ஆம் தேதி ஆகும்.