தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற 12 நாட்களே மீதம் உள்ள நிலையில் இதுவரை 105 கோடியே 72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை 105 கோடியே 72 லட்ச ரூபாய் பணமும், 803 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.


மக்களவை தேர்தல் இம்மாதம் 11-ஆம் நாள் துவங்கி, மே 19 வரை, ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.


நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் 10.35 லட்சம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில், உபரி இயந்திரங்களையும் சேர்த்து, 39.6 லட்சம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 17.4 லட்சம் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறையினரின் சோதனையில் 49 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர், கோவையில் நேற்று மட்டும் 149 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கம் மற்றும் பணம் வரையில் இதுவரை 3,839 தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதியப் பட்டிருப்பதாகவும், வேலூரில் அதிகமாக 10 துணை ராணுவக் கம்பெனியினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் சத்யாபிரதா சாஹூ தெரிவித்தார்.


மேலும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வாக்குச்சாவடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.