கர்நாடகாவில் வெற்றி பெறவே மத்திய அரசு மேகதாது திட்டத்திற்க்கு ஒப்புதல்: தம்பிதுரை

மக்களவையில் நமது மாநிலத்திற்கு பயன்பெறாத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நமது ஜனநாயக உரிமை என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று (புதன்கிழமை) 26 அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த எம்.பிக்களை (AIADMK) இடைநீக்கம் செய்தார்.
இதுக்குறித்து பேசிய தம்பிதுரை, இந்த வருடம் பொதுத்தேர்தல் வர உள்ளதால் மேகதாது அணைத் திட்டத்திற்க்கு ஒப்புதல் அளித்து சில இடங்களில் வெற்றி பெற நினைக்கிறது. அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நமது ஜனநாயக உரிமை. ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை எனத் தெரிவித்தார்.
தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் அதிமுக எம்.பிக்கள் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோசமிட்டபடியே அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளி செய்தனர். மறுதரப்பில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மீண்டும் 2 மணிக்கு மக்களவை கூடியதும் அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமளியில் ஈடுபட வேண்டாம் என்று தொடர்ந்து எச்சரித்து வந்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். ஆனால் சபாநாயகரின் உத்தரவை மீறி தொடர் அமளியில் ஈடுபட்டதால், 374ஏ விதிப்படி அதிமுகவை சேர்ந்த 26 எம்.பிக்களை 5 நாட்களுக்கு இடை நீக்கம் செய்தார் மக்களவை சபாநாயகர்.