தாமிர ஆலைகளே வேண்டாம் என்ற நிலையை தமிழக அரசு எடுக்க அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் மே 22 ஆம் தேதி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதை எதிர்த்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தது தமிழக அரசு. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டற்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் இருந்து வருகிறது. 
 
அந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுசூழல் மாசு தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற மேகாலயா மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.


இதை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம் என்ற நிலையை தமிழக அரசு எடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் வென்றுள்ளது என்று தெரிவித்துள்ள பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தீர்ப்பு அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை என்றும் எதிர்பார்த்தது தான் என்றும் கூறியுள்ளார்.


தொடக்கம் முதலே தேசிய பசுமைத் தீர்ப்பாய நடவடிக்கைகள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே இருந்ததாகவும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதால் பயன் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் தாமிர உருக்காலைக்கு தடை விதிக்க அவசரச் சட்டம் அல்லது சட்டப்பேரவை கூட்டி சட்டம் இயற்ற வலியுறுத்தியுள்ளார்.


இதே போல் தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம் என கொள்கை முடிவெடுத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதன் பின் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தங்களை கொடுத்து ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவும் அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.