பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து அவதூறு கருத்துகளை கூறி, பரபரப்பை ஏற்ப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இந்து சமய அறநிலையத் துறையை குறித்து மிகவும் மோசமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்து சமய அறநிலையத்துறையினர் காவல் நிலையங்களில் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்தனர். பல இடங்களில் போராட்டங்களை நடத்தினார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், எச்.ராஜாவைக் கண்டித்து இன்று மட்டும், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுதும் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். இந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். 


இதுக்குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் கொச்சைப்படுத்திப் பேசிய எச்.ராஜாவை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும்! 
அமைதியைக் குலைக்கின்ற வகையில் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வருபவருக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிப்பது ஏன்?" என பதிவிட்டுள்ளார்.


இந்த போராட்டத்துக்கு தொல்.திருமாவளவன், முத்தரசன், பழ.நெடுமாறன் உட்பட பல அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.