குட்கா வழக்கில், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் கூடுதல் ஆணையர் தினகரன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா குடோனில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தமிழகத்தில் போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகும், இந்த குடோன் சட்ட விரோதமாக இயங்குவதற்கு காவல் துறை, சுகாதாரத்துறை மற்றும் மத்திய கலால் வரித்துறையை சேர்ந்த பலர் லஞ்சம் பெற்றதற்கான டைரி ஆதாரமொன்று அந்த சோதனையில் சிக்கியது. அதனடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 


கடந்தாண்டு சிபிஐ டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வீடுகளில்  சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதில் சட்ட வீரோத பண பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.


இந்நிலையில், குட்கா விற்பணை மூலம் ரூ.639 கோடி ரூபாய் சட்டவிரோத பணபரிவர்தனை நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், வரும் 2 ஆம் தேதி டி.கே.ராஜேந்திரனும், 3 ஆம் தேதி கூடுதல் ஆணையர் தினகரனும் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, குட்கா முறைகேடு வழக்கில் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் ரூ.246 கோடி சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.