ஆன்லைன் பத்திரப்பதிவு விண்ணப்பத்தில் ஆங்கிலம் நீக்கம்? -TNGovt
ஆன்லைன் பத்திரப்பதிவு விண்ணப்பத்தின் முகப்புப் பக்கத்தில் ஆங்கிலத்தைச் சேர்க்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆன்லைன் பத்திரப்பதிவு விண்ணப்பத்தின் முகப்புப் பக்கத்தில் ஆங்கிலத்தைச் சேர்க்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளி பத்திரப்பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு மென்பொருள் மேம்படுத்தப்பட்டு, தமிழில் மட்டுமே பத்திரப்பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் ஆங்கில மொழியையும் இணைக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரப்பதிவு விண்ணப்பத்தின் முகப்புப் பக்கத்தில் ஆங்கிலத்தைச் சேர்க்க முடியாது என தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இது அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவித்தனர். இதனை கேட்ட நீதிபதிகள், அரசின் மற்ற விண்ணப்பங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இடம் பெற்றுள்ள போது, பத்திரப்பதிவுக்கான விண்ணப்பத்தின் முகப்பு பக்கத்தில் ஆங்கிலத்தைச் சேர்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பினர்.
மேலும், பத்திரப்பதிவுக்கான விண்ணப்பத்தின் முகப்புப் பக்கத்தை ஆங்கிலத்திலும் பதிவு செய்யும் வகையில் மென்பொருளை மாற்ற பரிசீலனை செய்ய முடியுமா என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.