உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக படுகொலை: திமுக மீது ஓபிஎஸ், இபிஎஸ் குற்றச்சாட்டு
இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய ஜனநாயக படுகொலையையும், தனி மனித சுதந்திரத்தையும் பறிக்கின்ற வகையிலே மனித உரிமை மீறலையும் திமுக கையிலே எடுத்திருக்கிறது -ஓபிஎஸ், இபிஎஸ் குற்றச்சாட்டு.
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று (செப்டம்பர் 6) நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 74.37 சதவீதம் பேர் வாக்களித்தனர். மேலும் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் சனிக்கிழமை( செம்டம்பர் 9) நடைபெறவுள்ளது. இன்று மாலை 6 மணியுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு பிரசாரம் ஓய்ந்தது.
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய ஜனநாயக படுகொலையையும், தனி மனித சுதந்திரத்தையும் பறிக்கின்ற வகையிலே மனித உரிமை மீறலையும் திமுக கையிலே எடுத்திருக்கிறது எனக் குற்றசாட்டி உள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டதாவது, "நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலையையும், தனிமனித சுதந்திரத்தையும் பறிக்கின்ற வகையிலேயே, மனித உரிமை மீறலையும் திமுக கையில் எடுத்திருக்கிறது.
திமுக அரசு காவல்துறையை தன் கைப்பாவையாக்கி, அரசு ஊழியர்களைத் தன்னுடைய ஏவல் துறையாக மாற்றி, தேர்தலில் தில்லுமுல்லுகளைச் செய்து, திறம்படச் செயலாற்றக் கூடிய அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகளின் பணிகளை முடக்கும் விதமாக, காவல்துறையை ஏவி அவர்களுடைய பணிக்கு முட்டுக்கட்டை போடுகிறது.
ALSO READ | தள்ளுமுள்ளு.. வாக்குவாதம்.. தொடங்கியது திமுக-அதிமுக இடையே மோதல்
குறிப்பாகத் தேர்தல் நடக்கக்கூடிய 9 மாவட்டங்களில் அதிமுக உடன்பிறப்புகள் மிக வேகமாகவும், அதே நேரத்தில் விவேகத்தோடும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வேகத்தையும், விவேகத்தையும் கண்டு அஞ்சி நடுங்குகின்ற திமுக, காவல் துறையைக் கைப்பாவையாக மாற்றி அதிமுக உடன்பிறப்புகளின் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, அவர்களை அச்சுறுத்தலுக்கு உண்டாக்கி, மன உளைச்சலை ஏற்படுத்தி, தேர்தல் பணிகளைச் செய்யவிடாமல் தடுக்கக்கூடிய முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.
கழக (அதிமுக) உடன்பிறப்புகள் எதற்கும் அஞ்சாத, யாருக்கும் அஞ்சாத செயல் மறவர்கள். இந்த சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சக்கூடிய பனங்காட்டு நரிகள் அல்ல. சென்று வா என்று சொன்னால் வென்று வரக்கூடியவர்கள். இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை அதிமுக ஒருநாளும் முன்னெடுக்காது.
குறிப்பாக, பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் காலம் காலமாக அதிமுகவின் கோட்டையாக இருந்து வரும் நிலையில், அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளரும், பரங்கிமலை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளருமான பெரும்பாக்கம் ராஜசேகரும், அவரது குடும்பத்தினரும் அந்தப் பகுதியிலே உள்ளாட்சித் தேர்தலில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றனர். மக்கள் செல்வாக்கு படைத்த, நியாயமான முறையிலே பொறுப்பைக் கையாண்டு மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய பெரும்பாக்கம் ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தேர்தல் பணி செய்யவிடாமல் அதிமுகவின் வெற்றியைத் தடுக்கும் விதமாக, காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி, தொடர்ந்து அச்சுறுத்தலைத் தந்து கொண்டிருக்கிறது திமுக அரசு.
அதே போல், பல இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவைச் சேர்ந்தவர்களையும், நிர்வாகிகளையும் தேர்தல் பணியாற்றவிடாமல் காவல் துறையினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். இச்செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
ALSO READ | தமிழக உள்ளாட்சி தேர்தல்: துரை முருகனின் பிரச்சாரமும்.. வலுக்கும் எதிப்பும்
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110 விதியின் கீழ், பெரும்பான்மையான- அதிமுக உடன்பிறப்புகளை அச்சுறுத்தக்கூடிய பணியில் கடந்த சில தினங்களாகக் காவல்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதை, அதிமுக வன்மையாகக் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த நிகழ்வு தொடர்கின்ற பட்சத்திலே ஜனநாயக வழியிலே மிகப் பெரிய போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கக் கூடிய சூழ்நிலைக்கு, காவல்துறை எங்களைத் தள்ளக்கூடாது என்றும், இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளில் காவல் துறை ஈடுபடக்கூடாது என்றும், நியாயமான வழியிலே சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக அடிப்படையிலே பணியாற்ற வேண்டிய காவல் துறை தற்போது திமுக அரசின் ஏவல் துறையாக மாறி இருப்பது உள்ளபடியே வருத்தத்திற்குரிய செய்தியாக இருந்தாலும், தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளைக் காவல் துறை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஆளும் அரசின் தேர்தல் விதிமீறலையும், ஜனநாயக விரோதப் போக்கையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் ஏற்கெனவே வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மனுவில் உள்ள அனைத்து சாராம்சங்களையும் உறுதியாக நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், உயர்நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை துச்சமென மதிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, உயர் நீதிமன்ற உத்தரவை முழுவதுமாக நிறைவேற்றி, நியாயமான முறையில் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
ALSO READ | அதிமுகவின் கோரிக்கையை ஏற்பதாக தமிழக அரசு உறுதி!
இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR