தமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ள முதலமைச்சர் பழனிசாமியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் காட்டாம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து, கோரிக்கை மனுவையும் அவர் அளித்தார்.


இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமியின் செயல்பாடுகளை விமர்சித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தண்ணீரின்றி தமிழக மக்கள் தவித்து வரும் நிலையில், டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு எந்த விதமான ஆக்கபூர்வமான திட்டங்களையும் கேட்டுப் பெற முடியாமல், தனது கட்சியின் "சொந்தப் பஞ்சாயத்து" மட்டும் பேசிவிட்டு திரும்பியிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள 29 கோரிக்கைகள் "புதிய மொந்தையில் பழைய கள்" அடைக்கப்பட்டுள்ளதைத்தான் நினைவூட்டுகிறது. ஆட்சி பொறுப்பேற்ற மூன்று வருடங்களாக பிரதமரை சந்திக்கும் போது கொடுக்கும் அதே மனுவைத்தான் இந்த முறையும் சற்று "வெட்டி, ஒட்டி" திரும்ப அளித்திருக்கிறார். உள்ளாட்சி நிதி, பட்டியலின மாணவர்களுக்கான மெட்ரிக்குலேசன் ஸ்காலர்ஷிப், மாநிலத்தில் செயல்படுத்தியுள்ள மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி, ஜி.எஸ்.டியால் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை என சுமார் 17 ஆயிரத்து 350 கோடி ரூபாய் நிதியை தமிழகத்திற்கு வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து- தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது.


நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், மேகதாது விவகாரம் என பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், முதலமைச்சர் கொடுத்த மனு “அலட்சியங்களின்” ஒட்டு மொத்த “அலங்காரமாக” இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். "மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை" என்று டெல்லியில் முகாமிட்டிருந்த கர்நாடக முதலமைச்சர் ஆணவமாக பேட்டியைக் கொடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே எள்ளி நகையாடியிருப்பது தமிழக விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியைத் தந்திருக்கிறது. ஆனால் முதலமைச்சர் கொடுத்த மனு "அலட்சியங்களின்" ஒட்டு மொத்த "அலங்காரமாக" இருக்கிறது.


"தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றுத்தாருங்கள்" என பிரதமர் நரேந்திரமோடியை வலியுறுத்தும் வரிகளை மனுவில் சேர்க்காததது வேதனையளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை நிதி அயோக் கூட்டத்தில் முறைப்படி எதிரொலிக்காமல், அடகு வைத்துவிட்டு வந்துள்ளதாக  ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.