தாழ்த்தப்பட்ட மாணவர்களை கழிவறையை கழுவ சொல்வதா?... பெரியார் பிறந்த ஈரோட்டில் இப்படி ஒரு கொடுமை
தாழ்த்தப்பட்ட மாணவர்களை அரசு பள்ளி தலைமை ஆசிரியை கழிவறை கழுவ சொன்ன கொடூரம் ஈரோட்டில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘இந்த காலத்துல யார் சார் சாதி பார்க்குறாங்க’... இந்த வசனம்தான் பெரும்பாலானோரால் உபயோகப்படுத்தப்படுவது. ஆனால் உண்மை நிலவரம் இந்த காலத்துலயும் சாதி பார்க்கிறார்கள் என்பதே. குறிப்பாக அந்த கொடூரம் பள்ளிகளில் தலைவிரித்தாடுவது பெரும் கொடுமை. அப்படிப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. ஈரோடு மாவட்டம் பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அதன் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் இருக்கிறார். மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டிய அந்த தலைமை ஆசிரியை மாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் 6 பேரை கழிவறையை சுத்தம் செய்ய சொல்ல அவர்களும் வேறு வழியின்றி அதை செய்திருக்கிறார்கள்.
இந்தக் கொடுமையை வெளியில் சொல்லவும் மாணவ, மாணவிகள் அஞ்சி தங்களுக்குள்ளேயே வைத்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் அந்த ஆறு பேரில் ஒரு மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் வந்திருக்கிறது. இதனையடுத்து அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த மாணவர் ப்ளீச்சிங் பவுடரை அதிகம் கையாண்டதும், கழிவறையை சுத்தம் செய்யும்போது கொசுக்கள் கடித்ததால் வந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூற, இதுகுறித்து அந்த மாணவரிடம் தாய் கேட்டிருக்கிறார். அதனையடுத்து தான் கழிவறையை சுத்தம் செய்ததை அந்த மாணவர் தாயிடம் கூறினார்.
இதனையடுத்து கடந்த வாரம் கழிவறையை சுத்தம் செய்துவிட்டு மாணவ, மாணவிகள் வெளியில் வரும்போது பெற்றோர்கள் நேரடியாகவே பார்த்துவிட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியையைத்தான் கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக குழந்தைகள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தலைமை ஆசிரியை மீது காவல் துறையிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து கீதாராணி தலைமறைவாகிவிட்டார்.
இதற்கிடையே, அந்த வகுப்பில் 40 குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் மட்டுமே கீதாராணி கழிவறையை சுத்தம் செய்ய சொல்லியிருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் கீதாராணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவான கீதாராணியை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. சாதியை ஒழிக்க பாடுபட்ட பெரியார் பிறந்த மாவட்டத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ