100க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் ; கைதேர்ந்த கொள்ளையனின் பகீர் பின்னணி..!
லாட்டரி சீட்டு விற்பனையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ப்ரண்ட்ஸ் ஆப் போலிசாக பணியில் சேர்ந்து பிரபல கொள்ளையனாக மாறிய வேலூர் மணிகண்டன் போலீசில் சிக்கியதன் முழு பின்னணி..!
மதுரை மாவட்ட காவல்துறை எல்கைக்கு உட்பட்ட கருப்பாயூரணி, ஒத்தக்கடை, மேலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக ஆட்கள் இல்லாத வீடுகளை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லும் சம்பவம் அதிகரித்தது. இதனையடுத்து கொள்ளையர்களை கைது செய்வதற்காக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த விசாரணையில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி மற்றும் ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும், நெல்லை மாவட்டத்தில் பதிவாகியிருந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் ஒத்துப்போனது. அதனடிப்படையில் நடைபெற்ற சோதனையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது பிரபல கொள்ளையனான வேலூர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகளான தமிழ்குமரன் மற்றும் லோகேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையா்களை கைது செய்ய தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படையினர் பிரபல கொள்ளையர்களான வேலூர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளியான தமிழ்குமரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 77பவுன் தங்க நகைகள் மற்றும் கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மதுரையில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல கொள்ளையனான மணிகண்டன் வேலூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ப்ரண்ட் ஆப் போலிசாக காவல்துறையில் பணிபுரிந்து காவல்துறையினருடன் பழகி பல்வேறு கொள்ளையர்களின் கொள்ளையடிக்கும் முறைகளை கற்றுக்கொண்டிருக்கிறார். அதனை பயன்படுத்தி ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ்வேலை விட்டுவிட்டு கொள்ளையனாக மாறி இருவரை கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டு பல்வேறு கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் இரு சக்கர வாகனத்திலயே சென்று புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை கண்காணித்து வீட்டின் உரிமையாளர்கள் வீட்டு சாவி மற்றும் பீரோ சாவிகளை வைக்கும் இடத்தை கண்டறிந்தும், பூட்டுகளை உடைத்தும் 10நிமிடங்களில் கொள்ளை சம்பவத்தை நடத்தி முடிக்கும் அளவிற்கு கைதேர்ந்த பிரபல கொள்ளையனாக மாறியுள்ளார். மேலும் கொள்ளையடிக்க செல்லும் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு பெண்கள் பயன்படுத்தும் ஸ்கூட்டி மாடல் இரு சக்கர வாகனத்தை பறித்து அதனுடைய பதிவெண்ணை மாற்றி சாதாரண நபர்கள் போல பல்வேறு மாவட்டங்களுக்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், பல்வேறு காவல்நிலையங்களில் பிரபல கொள்ளையான மணிகண்டன் மீது இரு கொலை வழக்கு உள்ளிட்ட 100கொள்ளை வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிரபல கொள்ளையனான வேலூர் மணிகண்டனை கைது செய்த தனிப்படையினரை காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் அழைத்து பாராட்டினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேசுகையில் : பிரபல கொள்ளையன் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளி தமிழ்குமரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான லோகேஷ் என்பவரையும் தனிப்படையினர் தேடிவருகின்றனர் எனவும், மணிகண்டனின் மற்ற வழக்குகளில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி கொள்ளையர்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாக வழக்கை விரைவாக விசாரணை நடத்தி உரிய தண்டனை பெற்றுதருவோம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | மதுபானம் விற்று தந்தை என்னை படிக்க வைத்தார் - டிஜிபி சைலேந்திரபாபு உருக்கம்!
அதிக நகைகளை பயன்படுத்துபவர்கள் வங்கி லாக்கர்களை பயன்படுத்த வேண்டும், புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்த வேண்டும் எனவும், மதுரை மாவட்டத்தில் கடந்த 4மாதங்களில் கஞ்சா, போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 32பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க| விமானத்தில் வந்த முள்ளம் பன்றி மற்றும் குரங்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR