பிப்.,5 பிப்.,9 பிப்.,10 தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும்
பிப்ரவரி 5-ம் தேதி அவனியாபுரத்திலும், பிப்ரவரி 9-ம் தேதி பாலமேட்டிலும், பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தலைமைச் செயலகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஊரை சேர்ந்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் ஆகியோர் இருந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி தமிழக சட்டமன்றப் பேரவையில் விலங்குகள் வதைத் தடுப்பு சட்ட முன்வடிவை நிறைவேற்றி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டமைக்காக மூன்று ஊர்களையும் சேர்ந்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் முதல்வருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
பிறகு ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறினார்கள்.அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகளையும் விழா குழுவினர் அறிவித்தனர்.
அதாவது பிப்ரவரி 5-ம் தேதி அவனியாபுரத்திலும், பிப்ரவரி 9-ம் தேதி பாலமேட்டிலும், பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் அறிவித்தனர்.