தமிழக மீனவர்களுக்கு மீன்பிடித் தடை காலத்துக்கான நிவாரணத் தொகை வங்கிக கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரையிலான  60 நாட்களுக்கு, மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்தில் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


தடை காலத்தில் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு அனுமதி இல்லை. எனினும் நாட்டுப்படகில் குறைந்த தூரம் சென்று மீன் பிடித்து வர அனுமதி அளிக்கப்படுகிறது.


இந்நிலையில் தமிழகத்தில் மீனவர்களுக்கு மீன்பிடித் தடை காலத்துக்கான நிவாரணத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று  தெரிவித்துள்ளார்.


இன்று இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில்., "மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும். கடந்த காலத்தை போன்று இந்த ஆண்டும் 1.67 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 வழங்கப்படும்.


மொத்த நிவாரணத்தொகையாக ரூ. 83.50 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.