திமுக-விற்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்!
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக-விற்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்!
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக-விற்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்!
அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் மின்துறை ஆகியவற்றின் பொறுப்புகளையும் வகித்து உள்ளார்.
இவர் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை கடந்த 2000-ஆம் ஆண்டில் தொடங்கினார். பின்னர் 2001-ஆம் ஆண்டில் திமுக-விற்கு தனது ஆரவினை தெரிவித்தார். திமுக கூட்டணியில் ராஜகண்ணப்பன் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன, அதன்படி இளையான்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார்.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே திமுக-வில் இணைந்த ராஜ கண்ணப்பன், பின்னர் அங்கு பெரியளவில் வளர்ச்சி இல்லாததால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தற்போது மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் பக்கத்து தொகுதியான ராமநாதபுரம் அல்லது மதுரையில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என ராஜ கண்ணப்பன் நம்பியிருந்தார். மதுரை தொகுதி ராஜன் செல்லப்பா மகன் ராஜன் சத்தியனுக்கும், இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ள தொகுதிகளுக்கும் வேறு நபர்களை அதிமுக தலைமை அறிவித்துவிட்டது.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த ராஜ கண்ணப்பன் அதிமுக-வில் இருந்து அடியோடு விலகுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு இன்று மாலை சென்ற ராஜ கண்ணப்பன், திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்தார். பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு தனது ஆதரவை அளிப்பதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ கண்ணப்பன், "திராவிட இயக்கத்தின் பூமியான தென் மாவட்டங்களில் இந்த தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுக கூட்டணியில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.