அடுத்தாண்டு முதல் பிளஸ் 1-க்கு பொதுத்தேர்வு: செங்கோட்டையன்
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை போல பிளஸ்-1 தேர்வையும் அரசு பொதுத்தேர்வாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகளில் இதுவரை 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் மட்டுமே அரசு பொதுத்தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-1 தேர்வு சாதாரண தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவ படிப்பில் சேர அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு போன்று பிளஸ் 1ம் வகுப்புக்கும் அடுத்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். பாடத்திட்டம் குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும்.
ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் புதிய புத்தகங்கள் வாங்கப்படும். யோகா உள்ளிட்ட திட்டங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிப்பிற்காக நூலகங்களுக்கு ரூ.2.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.