கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைதான் - தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்!
Gokulraj Murder Case Verdict: 2015இல் கொலைசெய்யப்பட்ட கோகுல்ராஜ் வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை மீதான மேற்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
Gokulraj Murder Case Verdict: சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை நீதிமன்றம் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அதேபோல வழக்கில் சங்கர் உள்ளிட்ட ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சுவாதியின் பிறழ் சாட்சி
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வந்தது. மேலும், இந்த நீதிபதிகள் மதுரைக்கிளையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், இவ்வழக்கும் அங்கு விசாரிக்கப்பட்டு வந்தது. மதுரையில் விசாரணை நடந்த போது, இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது பிறழ் சாட்சி அளித்ததாக சுவாதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
மேலும் படிக்க | பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு
யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைகளை, தவறுகளை சுட்டிக்காட்டி, தங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் வாதிட்டனர்.
நீதிபதிகள் நேரில் ஆய்வு
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பு சாட்சிகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவும் வாதிடப்பட்டது. இதனிடையே கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி மாதம் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
யுவராஜூக்கு தண்டனை குறைப்பு இல்லை
அந்த தீர்ப்பில்,"கோகுல்ராஜ், சுவாதியுடன் திருச்செங்கோடு கோவிலுக்கு சென்றது, அங்கிருந்து அவர் மாயமானது, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யுவராஜ் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது போன்ற குற்றச் சங்கிலி தொடரை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. மதுரை சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை" என குறிப்பிட்டுள்ளனர். மேலும், யுவராஜ் உள்ளிட்ட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அதேசமயம், யுவராஜூக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்காமல், வாழ்நாள் முழுவதும் சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, ஐந்து ஆண்டுகள் தண்டனையாக குறைத்தும் தீர்ப்பளித்தனர்.
5 பேர் விடுதலையும் உறுதி
மேலும், மதுரை நீதிமன்றத்தால் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்த நீதிபதிகள், யுவராஜ் உள்பட 10 பேரின் மேல் முறையீட்டு வழக்குகளையும், ஐந்து பேர் விடுதலைக்கு எதிராக கோகுல்ராஜின் தாய் சித்ராவும், காவல் துறையும் இணைந்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
ஊடகங்களுக்கான பொறுப்பு
தலைமறைவாக இருந்த யுவராஜ், ஊடகங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுபோன்ற செய்கைகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனவும், கருத்து சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
வழிகாட்டு நெறிமுறைகள்
மேலும், இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிப்பில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற யுவராஜ் தரப்பு வாதங்களை நிராகரித்த நீதிபதிகள், எதிர்காலங்களில் குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் நீதிபதிகள், தீர்ப்பில் வகுத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ