அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்கக்கோரும் மனு அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக்கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.


ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு வாராகி என்பவர் முறையீடு செய்தார்.


இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். எஸ்மா எனப்படும் இன்றியமையாச் சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின்படி அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்த நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனர். இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


சேலத்தில் நடைபெற்ற மருத்துவர்கள் போராட்டத்தில், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் பங்கேற்காததால், புறநோயாளிகள் சிகிச்சையில் பாதிப்பு ஏற்படவில்லை. சேலம் அரசு மோகன் குமாரலிங்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த 10 மருத்துவர்கள் மட்டுமே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். முன்னதாகவே, இதர மருத்துவர் சங்கத்தினர் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், புறநோயாளிகள் சிகிச்சை பெறுவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.