நாமக்கல் புதிய சட்டக் கல்லூரியை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய  அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாமக்கலில் அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள டான்சி வளாகத்தில் தற்காலிக கட்டிடத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரியை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.


இந்நிலையில் டான்சி வளாகத்தில் அமைந்துள்ள புதிய சட்டக் கல்லூரியை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் துவங்கி வைத்தனர். 


தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், கடந்த 3 ஆண்டுகளில், 6 சட்ட கல்லூரிகளை திறப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து கலந்தாய்வில் இடம் ஒதுக்கீடு பெற்றுள்ள 12 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான சான்றிதழ்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.  
புதிய சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 80 இடங்களும், 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 80 இடங்களும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 160 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.


விழாவில் பேசிய அமைச்சர் தங்கமணி, நாமக்கலில் புதிய அரசு சட்டக்கல்லூரி அமைய காரணமாக இருந்த தமிழக முதல்வருக்கும், சட்டத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வர வேண்டும் என்ற கனவு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.