நீட் தேர்வில் இருந்து விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநர் மூலம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்து ஆளுநர் அச்சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ALSO READ | நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க தமிழக அரசு முடிவு


இந்தக் கூட்டத்தில் திமுக (DMK) அமைச்சர்கள், இந்திய தேசிய காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தோர்  கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்குவதாக தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதில், "மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்களை மிகவும் பாதித்துள்ளது.  மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிப்பதாகவும் அமைந்துள்ளது.  



சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு தொடர்ந்து செல்லும் வசதி வாய்ப்புகள் பெற்றவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ள இந்த தேர்வு முறை பள்ளிக் கல்வியின் அவசியத்தை சீர்குலைக்கிறது.  இவற்றை கருத்தில் கொண்டு இந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் பன்னிரண்டாவது வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சட்ட முன்வடிவை 13/09/2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதனை குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். 


ALSO READ | NEET Exemption Bill: திருப்பி அனுப்பிய ஆளுநர் - அடுத்தது என்ன!?


இந்த சட்ட முன்வடிவை ஆளுநர் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில் முதலமைச்சர், ஆளுநரை நேரில் சந்தித்து இந்த சட்ட முன்வடிவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தினார்.  மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இதுகுறித்து மனு அளித்தும், ஒன்றிய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள்.  இருப்பினும் மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் சட்டமன்றத்தில் மக்கள் நலன் கருதி நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட முன்வடிவு ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் 5 மாத காலம் வைத்திருந்து பின்னர் அந்த சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்து ஆளுநர் 1/2/2022 அன்று பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார். 



மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழை நடுத்தர மாணவர்களின் நலனை பாதுகாக்கவும், மாநில அரசுகளின் உரிமையை மீட்டு எடுக்கவும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தீர்வாக அமையும் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் தேர்வு குறித்து ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து தெளிவாக விவாதித்து சரியான வாதங்களை எடுத்துரைத்து இந்த சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது" என இந்த சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



மேலும், இந்த கூட்டத்தில் பங்கேற்று கொள்ள அதிமுகவினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார்.  இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக ஓ பன்னீர்செல்வம், நீட் விலக்கு தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார்.


ALSO READ | NEET: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR