தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காட்டில் ரிஷிஷ் சர்வதேச பள்ளியினை நேற்று திறந்து வைத்தார்.  
          
தமிழ்நாடு ஆளுநர் இவ்விழாவில் உரையாற்றும்போது:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடவுள் வழிபாட்டிற்கு பெயர்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தின் பின் தங்கிய பகுதியான, மாங்காட்டில் இதுபோன்ற உலக தரம் வாய்ந்த பள்ளி அமைவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்கள் தங்களை பல துறைகளில் திறமையை வளர்த்துக்கொண்டு தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து வளர்வதுதான் கல்வி. மாணவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும்வகையில் முழுமையான உணர்வோடு கல்வி பயில வேண்டும் என்றார். 


மேலும் பேசிய அவர், நல்ல கல்வி என்பது நல்ல குருவின் மூலமே கிடைக்கப்பெறும். டாக்டர் அப்துல் கலாம் தனது பள்ளியாசிரியர் திரு. சிவசுப்ரமணிய ஐயர் அவர்கள் குறித்து நினைவுகூர்கையில், தனது ஆசிரியர் முதலில் வகுப்பறையில் பறவைகள் எவ்வாறு பறக்கும் என்பதை படங்களின் மூலம் விளக்கியபோது மாணவர்கள் அது தங்களுக்குப் புரியவில்லை என்று தெரிவித்தார்கள்.  உடனே ஆசிரியர், மாணவர்களை இராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று பறவைகள் பறப்பதை கண்கூடாக காண்பித்ததாகவும், பறவைகள் தங்கள் திசையை ஏற்றபடி மாற்றுவதற்கு இறக்கையையும், வாலையும் பயன்படுத்தும் முறைகளை கற்றுக்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். 


இதன்மூலம் ஒரு விமானம் பறப்பதற்கு அடிப்படை பறவைகள்தான் என்பதை மாணவர்கள் உணர்ந்தனர் என்று தெரிவித்துள்ளார். இதிலிருந்து ஒரு ஆசிரியர் ஒரு மாணவரது அறிவியல் சார் புரிதலையும் மற்றும் அறிவு தேடுதலையும் வெற்றிகரமாக நிறைவு செய்ததாலேயே இளம் விஞ்ஞானி அப்துல் கலாம் என்ற ஒருவர் கிடைக்கப்பெற்றார்.  எனவே இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் விரிவான திட்டமிடுதலின் மூலம் மட்டுமே மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சாரத்தில் தலைசிறந்து விளங்க முடியும் என தெரிவித்தார்.


மேலும் இப்பள்ளி நிர்வாகத்தினர் தர்ம சிந்தனையோடு மாங்காடு பகுதி வாழ் பொதுமக்களுக்கு சேவை செய்து பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும், இப்பள்ளியின் நிறுவனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்தினையும் தெரிவித்துக்கொண்டார்.