தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் தேசிய வேளாண் நிறுவனம் விவசாயிகளுக்காக உருவாக்கிய காஞ்சி என்னும் பணமில்லா மின்னணு மென்பொருளை ஆளுநர் மாளிகையில் இன்று துவக்கி வைத்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் பேசுகையில்... மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தும் பிரதான் மயதிரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா, திட்டதின் கீழ் தமிழகத்தில் 4.82 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் 1 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 15.2 லட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டு மானியமாக ரூ.487.37 கோடி தமிழக அரசால்
வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


மண்வள அட்டை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 57.63 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 88.52 லட்சம் வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது போன்ற திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.


மேலும் கூறுகையில், உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களை மேம்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அந்நிறுவனங்களின் வர்த்தகத்தைப் பெருக்க மின்னணு தொழில் நுட்பங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் கூறினார். தேசிய மின்னணு வேளாண் சந்தை (FPOs),யில் இணையும் வகையில் தமிழக சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். காஞ்சி மென்பொருள் உழவர்களை வங்கிகளுடனும், சந்தைகளுடனும் இணைப்பதற்கு உதவிகரமாக
இருக்கும் என்றும் இதன் மூலம் வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரம் பெருகும் என்றும் தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.


பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் "டிஜிட்டல் இந்தியா" திட்டத்தில் வேளாண் பெருமக்கள் மகளிர் மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெற இது போன்ற தொழில் நுட்பங்கள் பெரும் பங்கு வகிக்கும் என்றும் கூறினார். பின்னர் விழாவின் முடிவில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகளுக்கு மின்னணு பங்கு பத்திரங்களையும் தமிழக ஆளுநர் அவர்கள் வழங்கினார்.