சனாதான தர்மத்தில் தீண்டாமை இல்லை... சொல்வது ஆளுநர் ஆர். என். ரவி!
Governor RN Ravi: சனாதான தர்மத்தில் தீண்டாமை இருப்பதாக சிலர் சொல்வது அவர்களது அறியாமையை தான் காட்டுகிறது என ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார்.
Governor RN Ravi: திருவல்லிக்கேணியில் உள்ள, ராகவேந்திர மடத்தின் 50 ஆண்டு தின விழா கொண்டாட்டத்தில், புதிய மடத்தை ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (ஜூலை 1) திறந்து வைத்தார். அக்கூட்டத்தில் பேசிய ஆளுநர் ரவி,"பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. இந்த பாரதத்தில் உருவானதுதான் சனாதன தர்மம், அது பல தலைமுறைகளுக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை. சனாதான தர்மத்தில் தீண்டாமை இருப்பதாக சிலர் சொல்வது அவர்களது அறியாமையை தான் காட்டுகிறது. சனாதனம் என்பது எல்லோரும் சமம் என்பதுதான்.
இந்திய அரசின் அமைப்பில் சட்டத்திலேயே பாரதம் என்பது தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதத்தில் நாம் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாகத்தான் வாழ்ந்து வந்தோம். ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்திற்கு வந்த பிறகு தான் சிறந்த மொழி ஆங்கிலம் என்று கூறி வந்தனர். இந்த பூமி முனிவர்களாலும் ரிஷிகளாலும் உருவானது.
மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தல்
சமஸ்கிருதமும் தமிழும் மிகவும் தொன்மையான மொழியாகும். இதில் பல்வேறு இலக்கியங்களும் ஆன்மீக தகவல்களும் நமது பாரம்பரிய கலாச்சாரம், ஆன்மீகம் ஆகியவை தமிழ் சமஸ்கிருத இலக்கியங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன மகாகவி பாரதி பாரதம் என்று கூறியுள்ளார். சமூக ஒற்றுமை தீண்டாமை இல்லை என்பதையும் ராமானுஜர், சங்கரர், பத்வாச்சாரிய போன்ற ஆன்மீக குருக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அருமையான அழகான சென்னை நகரத்தில் மிகச் சிறந்த ஆன்மீக தலைவர்களும், இலக்கியவாதிகளும், கல்வியாளர்களும் உருவாகி வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வளவு சிறப்பு மிக்க சென்னையில் தற்போது சாக்கடைகளும் கழிவு நீர்களும் ஆங்காங்கே காணப்படுகிறது. இதை சரி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். நாம் பல்வேறு தரப்பில் வேறுபட்டிருந்தாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்கிறோம். இன்னும் 25 ஆண்டுகளில் சனாதான தர்மம் தான் சிறந்தது என்று கூறப்படும்" என தெரிவித்தார்.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக அறிவித்த ஆளுநர், அன்றிரவே அந்த உத்தரவை தற்சமயம் நிறுத்திவைப்பதாக அறிவித்தார். இந்த இரண்டு உத்தரவு குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநருக்கு நேற்று பதில் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, ஆளுநரின் இந்த சனாதன தர்மம் அடிப்படையிலான கருத்துக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் சென்னையில் நடந்த கொலை: பின்னணி இதுதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ