Ramar Temple Consecration Impact In Tamil Nadu: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் 2.7 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட இந்த ராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) இன்று நடைபெறுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி முன்னிலை வகிக்கிறார். மேலும், ஆயிரக்கணக்கான பிரபலங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் நேரிலும் வருகை தந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் விழாக்கோலம்


ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்துகளின் வழிப்பாட்டுத் தலங்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மேலும், பல தலைவர்கள், பிரபலங்கள் அயோத்திக்கு செல்ல இயலாத நிலையில், நாட்டின் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்கின்றனர். 


குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையிலும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் கோவிலிலும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனர். அந்த வகையில், சிறப்பு பூஜையில் அதிகாலை கலந்துகொண்ட ஆளுநர் தற்போது அவர் X பக்கத்தில் ஒரு பரபரப்பான கருத்தை பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க | ராமர் கோயில் திறப்பு விழா நேரலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி


ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்னது என்ன?


அதில்,"சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி கோயிலுக்கு சென்று  இன்று காலை அனைவரின் நலனுக்காகவும் பிரபு ஸ்ரீராமிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.


இந்த கோயிலின் அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குத் தெரியாத பயம் மற்றும் ஒரு பெரும் அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் நிலவும் பண்டிகை சூழலுக்கு, இது முற்றிலும் மாறுபட்டது. ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், இங்குள்ள கோவில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார். 



மேலும் படிக்க | ராமர் கோயில் திறப்பு விழா நேரலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி


அர்ச்சகர்கள் தரப்பு


மேலும், இந்த கோயிலின் தலைமை பட்டாச்சாரியார் தனியார் ஊடகம் ஒன்றில் இந்நிகழ்வுக்கு பின்னர் பேசும்போது, ஆளுநர் ஏன் அப்படி குறிப்பிட்டார் என தெரியவில்லை என்றும் ஆனால் யாருக்கும் அச்ச உணர்வு இல்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், "மற்றொரு தனியார் தொலைக்காட்சி தங்களிடம் ஆளுநரின் வருகையின்போது பேட்டி கேட்டது. அவர்களுக்கு பின்னர் கொடுக்கிறோம் என கூறிவிட்டு, சற்று பதற்றத்தில் இருந்தோமே தவிர வழக்கமாக விபிஜகளுக்கு கொடுக்கப்படும் நடைமுறையைதான் பின்பற்றினோம்" என்றார்.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழ்நாடு அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறிப்பாக, அவரது தனது X பதிவில்,"தமிழ்நாட்டில் அடக்குமுறையின் தொடர்கதை தற்போதும் தொடர்கிறது. ஒரு சிறிய கிராமம் (200 வீடுகளுக்கு மேல் இல்லை). அங்கு மக்கள் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடவும், பிரதமரை பார்க்கவும் விரும்பினர்.


நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு


இதற்கு, மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்காதபட்சத்தில், வாடகை எல்இடி திரையை பொருத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் டிசி அமர்ந்துள்ளார். LED சப்ளையர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். கிராமத்தின் பெயர் கருநிலம், செங்கல்பட்டு மாவட்டம் ஆகும்.


மற்றொரு சம்பவம், ஆனால் இது பெரிய கிராமம். LED திரை அனுமதிக்கப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில். தனியாருக்கு சொந்தமான புகழ்பெற்ற காமாட்சி கோவிலின் உள்ளே, காலை 8 மணி முதல் பஜனைகள் தொடங்கியுள்ளன. சாதாரண உடையில் காவலர்களைக் கொண்டு LED திரைகள் அகற்றப்படுகின்றன.  



ஒரு கோவிலில், தனிப்பட்ட முறையில் ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டையை காண விரும்பியவர்களுக்கு இப்படி செய்வது என்பது, நமது வழிபாட்டு உரிமையை கடுமையாக மீறுவதாகும். தமிழகத்தில் உள்ள திமுக அரசு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. இந்து விரோத திமுக இப்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது. போலீசார் மூலம் மக்களின் நம்பிக்கைகள் நசுக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 466 எல்இடி திரைகள் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


"வயித்திலே அடிப்பது"


அவற்றில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் திரைகளை பறிமுதல் செய்துள்ளனர் அல்லது நேரடி ஒளிபரப்பைத் தடுக்க படைகளை அனுப்பியுள்ளனர். எல்இடி சப்ளையர்கள் அச்சத்துடன் ஓடி வருகின்றனர். இந்து விரோத திமுக சிறு வணிகர்களை தாக்குகிறது. தமிழில் இதை “வயித்திலே அடிப்பது” என்பார்கள்.


இந்து சமய அறநிலையத்துறை வசம் உள்ள ஸ்ரீபெரும்புதூர் செல்வ விநாயகர் கோவில், தனியாரால் நடத்தப்படும் மொளச்சூர் கருமாரியம்மன் கோவில், தனியாரால் நடத்தப்படும் செல்விழிமங்கலம் ஜாம்போதை பெருமாள் கோவில் போன்ற கோவில்களில் தமிழ்நாடு காவல்துறையினரால் அன்னதானம் தடுக்கப்படுகிறது. இந்து எதிர்ப்பு திமுக அரசு காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை தொடர்கிறது" என குற்றச்சாட்டை முன்வைத்தார்.


காவல்துறை விளக்கம்


மேலும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் எல்இடி திரை அகற்றப்பட்டது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தெரிவிக்கையில், "காமாட்சி அம்மன்கோவிலில் பஜனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதி பெறப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று கடிதம் கொடுத்து இருந்தனர். கோவிலில் பஜனை, அன்னதானம், சிறப்பு வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை" என்றார்.


மேலும் படிக்க | தமிழக அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக சார்பில் ரிட் மனு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ