குட்கா ஊழல்: சிபிஐ விசாரணை தேவை; பாமக சார்பில் ஜூலை 4-ம் தேதி போராட்டம்!
குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வரும் ஜூலை 4-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடைபெறும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், தமிழக காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஊழலை மூடி மறைக்க தமிழக அரசு முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது ஆகும்.
குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; இதுகுறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்ற முழக்கங்கள் கடந்த இரு நாட்களாக தீவிரமடைந்திருந்த நிலையில், சட்டப்பேரவையில் இதுகுறித்து விளக்கமளித்த முதலமைச்சர் இந்த விவகாரம் காவல்துறை விசாரணையில் இருப்பதாகக் கூறி மழுப்பியிருக்கிறார்.
இதில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், குட்கா ஊழலில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தாம் ஒரு அப்பாவி என்றும் அறிக்கை வெளியிட்டு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார்.
சென்னை புறநகர் பகுதியில் உள்ள குட்கா ஆலைகள் உட்பட தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் எம்.டி.எம் குட்கா நிறுவனத்தின் பங்குதாரர் மாதவராவ் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் அதிகாரிகள் கையூட்டு வாங்கியதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தும்படியும் கடந்த ஆகஸ்ட்11-ம் தேதி தமிழக அரசுக்கு வருமானவரித்துறை கடிதம் எழுதியது.
அதன் பின்னர் 10 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தியிருந்தால், உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எதுவும் நடக்க வில்லை, மேலும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெகுமதிகளும், பதவி உயர்வும் தான் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.
உண்மையில், இந்த விஷயத்தில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. வருமானவரித்துறையினர் அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார் அனுப்பிய கோப்பு கிடப்பில் போடப்பட்டது. அதுமட்டுமின்றி, குட்கா ஊழல் விசாரணையை தீவிரப்படுத்த முயன்றதால் தான் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் அசோக்குமார் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.
இந்த ஊழல் குறித்த தகவல்களை திரட்டிய காவல்துறை தலைவர் அருணாச்சலம் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டார். மேலும், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட ஜார்ஜ், இதுபற்றி விசாரணை நடத்தும்படி கடந்த டிசம்பரில் தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதம் கையூட்டுத் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட போதிலும் அதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குட்கா ஊழலில் தமக்கு தொடர்பு இல்லை என்றும், இந்த குற்றச்சாற்றை சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் ஏன்? ஊழல் செய்யவில்லை எனில் விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தயக்கம்? குட்கா ஊழலை மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரித்தால் மட்டுமே இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்.
எனவே, குட்கா ஊழல் குறித்து மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிடவும், ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னையில் அறவழிப் போராட்டம் நடத்தப்படும். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும்.
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.