ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஹேபர்மாஸ் 1929 இல் பிறந்தவர். சம காலத்தில் வாழும் மிக முக்கியமான தத்துவ அறிஞர். 2018 இல் ஜெர்மன் பிரெஞ்சு ஊடக விருது பெற்றவர். நவீன மார்க்சியராக அடையாளம் காணப்பட்டவர். மேலும் தனது ஆய்வின் போக்கில் பல்வேறு நகர்வுக்கு பின்னர் ஜனநாயகம் குறித்த கருத்தியல் பார்வையோடு பயணித்தவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹேபர்மாஸ் நூலின் ஆசிரியர் இரா.முரளி. இவர் தத்துவத் துறைப் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தத்துவத்துறையில் ஆழங்கால் பட்டவர்களில் ஒருவராகத் திகழ்பவர். மேலும் இவர் Socrates Studio வலையொளிப் பக்கத்தில் கோட்பாடுகள், கோட்பாட்டாளர்கள், தத்துவ அறிஞர்கள், தத்துவவியல் குறித்த உரையாடலை ஓய்வில்லாமல் தீவிரமாகப் பேசி வருபவர்.


ஹேபர்மாஸ் தன் ஆய்வு அணுகுமுறை மூலம் கருத்தியலில் அடுத்தடுத்த கட்ட நகர்வுகளை நோக்கிச் செல்வதை முன்வைத்து உரையாடுகிறது ஹேபர்மாஸ் நூல்.


மேலும் படிக்க | Tamil Book Review: நடிப்பாற்றலின் உச்சம் சங்கரதாஸ் சுவாமிகள் : நாடகவியலாளர் கி.பார்த்திபராஜா


விமர்சனக் கோட்பாடு : ஓர் அறிமுகம், ஹேபர்மாஸ், அறிவும் மனித நலன்களும் (Knowledge & Human Interests), தொடர்பு செயல் கோட்பாடு (Theory of Communicative Action), தொடர்பு நெறிக் கோட்பாடு (Communicative Ethics), பொது வெளி, ஹேபர்மாஸியமும் மார்க்சியமும், உலகமயமாதல் - பயங்கரவாதம் தொடர்பு செயல் கோட்பாடு, மதங்கள் குறித்து ஹேபர்மாஸ், முடிவாக... எனப் பத்து உட்தலைப்புகளில் ஹேபர்மாஸ் நூல் பேசப்பட்டுள்ளது. 


மார்க்சியக் கோட்பாடானது பல்வேறு நிலைகளில் ஆய்வுக்கும், மறு வாசிப்புக்கும், மறு கட்டமைப்புக்கும், விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அதிக அளவில் விமர்சனத்தை முன் வைத்த நிறுவனம் ஜெர்மனியிலுள்ள பிராங்க்பர்ட் பள்ளி ஆகும். இந்தப் பள்ளியில் கார்ல் கிரன்பெர்க் பொறுப்பில் இருந்தபோது மார்க்சியத்தை அறிவியலாகப் பார்க்கப்பட்டுள்ளது. பிராங்க்பர்ட் பள்ளி நிறுவனத்தில் ஹோர்க் ஹையர், தியோடோர் அடோர்னோ, லியோ லோவெந்தல், எரிக் பிரோம், பெடரிக் பொல்லாக், ஹெர்பர்ட் மார்க்யூஸ், வால்டர் பெஞ்சமின் போன்றோர் சிறப்பாகச் செயல்பட்டனர். இதில் தியோடோர் அடோர்னோ, ஹோர்க் ஹைமர் ஆகிய இருவரும் ஆய்வின் இறுதி வரை செயல்பட்டனர். அவர்களின் ஆய்வுக் கருத்துகளே ’நவீன விமர்சனக் கோட்பாடு’ என அடையாளப்பட்டது. எந்த ஒன்றையும் விமர்சனப் பார்வையுடன் புரிந்து கொள்வதே ஆகச்சிறந்த அறிவாகும். அதனடிப்படையில் தனி மனிதனுக்கும் சமூகத்திற்குமான உறவு குறித்த விளக்கம், புரிதல், விமர்சனக் கோட்பாட்டின் முக்கிய அம்சங்களாக ஹோர்க் ஹைய்மர் கருதியுள்ளார். இவரைத் தொடர்ந்து விமர்சனக் கோட்பாட்டாளர்களில் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிராங்க்பர்ட் சிந்தனையாளர் ஹேபர்மாஸ்.


ஹேபர்மாஸ் இதுவரை எந்தத் தொலைக்காட்சிக்கும் பேட்டி கொடுத்ததில்லை. மேலும், தனக்காக எந்த ஒரு மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பல அறிஞர்களால் பேசப்படும் சிந்தனையாளரான இவர் எழுத்து என்ற அளவில் நில்லாமல் பல அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர். இளம் வயதில் ஹிட்லரின் நாசிப்படையில் சேர்க்கப்பட்டுப் போர்முனைக்கு அனுப்பப்பட்டவர். பின் நியூரம்பெர்க் போர்க் குற்றப் படத்தைப் பார்த்து தான் வாழும் அரசியல் சூழலை உள்வாங்கிக் கொண்டவர். அரசியல் குறித்த குற்றங்களைக் குறித்த இவரின் சிந்தனையோடு பிராங்க்பர்ட் பள்ளியின் சிந்தனையாளர்கள் ஒத்துப்போனர். அதன்பால், 1956இல் அதோர்னாவின் உதவியாளராகச் சேர்ந்தவர். 


பின்னர், ஹோர்க் ஹைமர் ஆய்வுத்துறைக்குத் தலைவரானார். தனது தத்துவ எண்ணங்களைத் தொடர்ந்து பிரதிபலித்தார். ஒரு கட்டத்தில் 1970இல் ’பயங்கரவாதிகளின் ஆன்மீகத் தந்தை’ என்றும் அழைக்கப்பட்டுள்ளார். மனிதர்களின் பரஸ்பரத் தொடர்பு என்பது இவரது தத்துவமாக உள்ளது. அடுத்த கட்டமாகக் கூட்டுறவுடன் கூடிய உரையாடலுக்கு நகர்கிறார். இவரது கருத்தியலில் வேபர், துர்க்கைம், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகளை உள்வாங்கியதாக இருக்கும். மேலும் பிராய்டின் மனோதத்துவச் சிகிச்சை முறையில் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் இதனைக் கருத்தியல் விமர்சனச் செயலுக்கு அடிப்படையாக்க முயற்சி செய்துள்ளார். விமர்சனக் கோட்பாட்டில் பகுத்தறிவை வலியுறுத்தினார். இவர் எழுதிய நூல்கள் அறிவும் மனித நலன்களும், தொடர்பு செயல்பாடு காலகட்டம் ஆகிய இரண்டு நூல்களின் மையமானது கோட்பாடுகளுக்கும் நடைமுறைக்கும் உள்ள பிரச்சினைகளைப் பேசுவதாகும். அறிவும் மனித நலன்கள் நூல் குறித்த பதிவுகளைப் பற்றி விரிவாக உரையாடுகிறார் நூலாசிரியர். மேலும் தொடர்பு செயல் கோட்பாடு மற்றும் தொடர்பு நெறிக் கோட்பாடு ஹேபர்மாஸ் ஆய்வின் அடுத்த கட்ட நகர்வையும் பேசிச் செல்கிறது இந்நூல்.


தொடர்பு நெறிக் கோட்பாட்டின் தொடர்ச்சியாக பொதுவெளி என்னும் கருத்தியலை முன்வைத்து ஆய்வு செய்கிறார் ஹேபர்மாஸ். பொதுக் களத்தில் நடைபெறும் உரையாடல் விமர்சனத் தன்மையும் பகுத்தறிவும் கொண்டதாக இருக்கும் என்கிறார். பொதுவெளியின் வரலாறு, சுதந்திர வடிவிலான பொதுவெளி, சமூக நல அரசில் பொதுவெளியின் நிலை என்னும் தலைப்புகள் மூலம் பொதுவெளி குறித்து பேசிச் செல்கிறார் நூலாசிரியர் இரா.முரளி. ”மனிதனை மேம்படுத்துவது உழைப்பு; அதை மனிதன் சக மனிதர்களுடன் கூட்டாகவே செய்கிறான்” என்று மார்க்ஸ் கூறுகிறார். ஆனால் மனிதர்களுடைய தொடர்பு செயலும் மொழியின் முக்கியத்துவத்தை உழைப்பின் அளவிற்கு மார்க்ஸ் வலியுறுத்த வில்லை என்று ஹேபர்மாஸ் கூறுகிறார். மேலும் மனிதருடைய உறவுகளின் தன்மையில் தோழமை ஏற்படுத்தும் பரஸ்பரத் தொடர்புகள் பற்றியும் மார்க்ஸ் விவாதிக்கவில்லை என்றும் கூறுகிறார். மேலும், பரஸ்பரத் தொடர்பின் மூலமும் செயல்பாட்டின் மூலமும் முன்னெடுக்க முடியும் என்கிறார் ஹேபர்மாஸ். இப்படியாக மார்க்ஸிடம் முரண்பட்டாலும் ஹேபர்மாஸ் மார்க்ஸ் கருத்தியலைப் புறந்தள்ளவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக மார்க்சியத்தின் மீது விமர்சனப் பார்வையை முன் வைத்து தன் ஆய்வை மேற்கொண்டிருந்தார். ஆதலால்தான் ஹேபர்மாஸ் நவீன மார்க்சியர் என்றழைக்கப்பட்டார்.


இன்றைய முதலாளித்துவம் வளர்ந்த முதலாளித்துவமாக உள்ளது என்று நவீன மார்க்சியர் ஹேபர்மாஸ் கூறுகிறார். ஹேபர்மாஸ் பேசிய தொடர்பு செயல்பாடு 'சமூக ஜனநாயக சோசியலிசம்' என்று அழைத்துள்ளனர். ஹேபர்மாஸ் ஆய்வுகள் குறித்து ஆழமாக விரிவாகச் சிந்தித்து செயல்படும் போக்கில் தன்னுடைய பார்வையும் கருத்தியலையும் மாற்றிக் கொண்டுள்ளார் என்பது நோக்கத்தக்கது. குறிப்பாக, மதம் குறித்த கருத்தாடலில் இதனைக் கவனப்படுத்தி எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர் இரா.முரளி. இப்பகுதியை வாசகனால் மிக எளிமையாகவும் விரைவாகவும் புரிந்து கொள்ள இயலும். ஹேபர்மாஸ் மதங்களுக்கு எதிரான விளக்கம், மதங்கள் குறித்துக் கடுமையான விமர்சனம் செய்வதை விடுத்து மதச்சார்பற்ற விமர்சனம், மத நம்பிக்கை என்பது தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்புகளை பொறுத்தது, மதங்கள் சமுதாயத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் செய்யப்படும் என்பாதன கருத்தியல்களைப் பல்வேறு காலகட்டத்தில் தன் நிலைப்பாடாக எடுத்துள்ளார் ஹேபர்மாஸ். மதம் குறித்த ஹேபர்மாஸின் இறுதி நிலைப்பாடு ’பின்னை மதச்சார்பின்மை சமூகம்’ என்ற புதிய கருத்தியலாக விவாதிக்கப்பட்டது.


வாசிப்பின் ஓட்டத்தில் ஹேபர்மாஸ் நூலை இன்னும் எளியமையாக விவரித்து இருந்தால் அனைத்துநிலை வாசகர்களைச் சென்றடைந்திருக்குமோ? என்பதான எண்ணம் வாசகருக்கு எழ வாய்ப்புள்ளது. வாசகர்கள் அடிப்படையான பல கருத்தாடலை உள்வாங்க மறுவாசிப்பைக் கோர வேண்டியிருக்கும். மேலும், நூலில் உள்ள சில உட்தலைப்புகளின் மொழிநடை வலையொளிப் பக்கத்தில் பேசுவதற்கு உகந்த நடையாக உள்ளதை வாசகர்கள் பெறக்கூடும். மேலும், நூலாசிரியர் ஹேபர்மாஸைச் சில கோட்பாட்டாளர்களோடு பொருத்திப் பேசுவது தேடலுக்கான தீனியாக அமையும். அதே சமயத்தில் சில நூல்களையும் தத்துவ அறிஞர்களையும் அறிமுகப்படுத்திச் செல்வது வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான வாய்ப்புள்ளது. விமர்சனப் பார்வைக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது ஹேபர்மாஸ்.


Author முனைவர் பலராமன்


மேலும் படிக்க | எழுத்தாளர் இமையம் 'கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரர்' - எழுத்தாளர் அரவிந்தன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ