ஹஜ் புனிதப் பயண நடைமுறைகள் மாற்றமின்றி தொடர வேண்டும் : ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் எஸ். ராமதாஸ் அவர்கள் ஹஜ் புனிதப் பயண நடைமுறைகள் மாற்றமின்றி தொடர வேண்டும்! என்று தனது சமூக வலை தளம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
இஸ்லாமியர்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹஜ் புனிதப் பயணம் தொடர்பான கொள்கையை மாற்றியமைக்கும்படி அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது.
அப்பரிந்துரைகளில் சில வரவேற்கத்தக்கவை என்றாலும் கூட பெரும்பாலானவை புனிதப் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை. புனிதப்பயணத்துக்கு முட்டுக்கட்டைப் போடும் நிபந்தனைகள் கண்டிக்கத்தக்கவை.
மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அளித்துள்ள வரைவு ஹஜ் கொள்கையின் முக்கிய அம்சங்களின் முதன்மையானது ஹஜ் மானியத்தை ரத்து செய்வதாகும்.
ஹஜ் மானியத்தை அடுத்த பத்தாண்டுகளில் ரத்து செய்ய வேண்டும் என்று 2012-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதித்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இது உண்மை தான்; இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், ஹஜ் பயணத்திற்கு மானியம் என்பதும், அது இப்போது ரத்து செய்யப்படுவதாகவும் கூறுவது ஹஜ் புனிதப்பயணத்தை இழிவு படுத்தும் செயலாகும்.
ஹஜ் புனிதப் பயணத்திற்கு மானியம் பெறுவது இஸ்லாமிய நெறிகளுக்கு எதிரானது ஆகும். அதனால், ஹஜ் மானியத்தை பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் விரும்புவதில்லை. அதேநேரத்தில் ஹஜ் மானியம் என்று அரசு கூறுவது குறித்து நாம் தெளிவு பெற வேண்டியது அவசியமாகும்.
இஸ்லாமியரின் ஹஜ் புனிதப்பயணம் தொடக்கத்தில் கடல் வழியாகவே மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வானூர்தி சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், ஹஜ் பயணிகளை விமானம் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரத்திற்கு அனுப்பி வைக்க இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது.
கடல்வழிப் பயணத்திற்கான கட்டணம் குறைவாகவும், விமானப் பயணக் கட்டணம் அதிகமாகவும் இருந்த நிலையில் வித்தியாசத் தொகையை மத்திய அரசு செலுத்தும் என்று இந்திரா காந்தி அரசு அறிவித்தது. இதைத் தான் ஹஜ் மானியம் என்று பலரும் கூறுகின்றனர்.
உண்மையில் கப்பலில் சென்ற ஹஜ் பயணிகளை விமானத்தில் அனுப்பி வைத்தது மட்டும் தான் மத்திய அரசு செய்து கொடுத்த வசதியாகும். மற்றபடி எந்த இஸ்லாமியரும் மத்திய அரசிடமிருந்து ஹஜ் மானியம் என்ற பெயரில் எந்த உதவியும் பெறுவதில்லை.
ஹஜ் மானிய ஒழிப்பு என்ற பெயரில் அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய நடைமுறை தான் கேலிக்கூத்தானதாகும். ஹஜ் மானியத்தை ரத்து செய்து விட்டதாலோ, என்னவோ, இந்திரா காலத்தில் இருந்ததைப் போன்று ஹஜ் புனிதப் பயணிகளை மீண்டும் கப்பலில் அனுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது பிற்போக்குத்தனமான, நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்றாகும்.
நான்கு பத்தாண்டுகளுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து அதிகமானதாகவும், விமானப் போக்குவரத்து குறைவானதாகவும் இருந்ததால் கப்பல் போக்குவரத்துக் கட்டணம் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது இந்தியாவுக்கும், மக்காவுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இல்லாத நிலையில் இந்தத் திட்டம் எந்த வகையிலும் ஆக்கப்பூர்வ பயன்களை அளிக்காது. மாறாக குழப்பங்களையே ஏற்படுத்தும்.
ஹஜ் பயணத்திற்காக சவுதி அரசுடன் பேசி புதிய கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. அவ்வாறு கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினால் கூட அதற்கான கட்டணம் விமானக் கட்டணத்தை விட அதிகமாகத் தான் இருக்கும்.
அதுமட்டுமின்றி, மூன்று மணி நேரத்தில் விமானம் மூலம் செல்ல வேண்டிய மக்காவுக்கு பல நாட்கள் பயணம் செய்வது தேவையற்றது.
மேலும் சோமாலியக் கடற்கொள்ளையர்கள், ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போர் ஆகியவற்றால் ஹஜ் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
கப்பல் பயணத்தை கருத்தில் கொண்டே புறப்பாடு இடங்களை 21-லிருந்து ஒன்பதாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால், பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் புறப்பாடு இடங்களுக்கு செல்லவே இன்னொரு ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
அதுமட்டுமின்றி, லக்னோ, தில்லி, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களில் துறைமுகம் இல்லாத நிலையில் அங்கிருந்து துறைமுகங்களுக்கு அதிக நேரம் பயணிக்க வேண்டியிருக்கும்.
இதனால் ஹஜ் புனிதப்பயணம் அலைக்கழிப்பு நிறைந்ததாக மாறிவிடும். மேலும், 70 வயதுக்கு மேற்பட்ட பயணிகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் ஹஜ் பயணம் செய்ய முடியாமல் போய்விடும். ஹஜ் பயணத்திற்கான விசாக்கள் குறைக்கப்படுவதும் நல்ல நோக்கம் கொண்ட செயலல்ல.
அதேநேரத்தில் 45 வயதைக் கடந்த இஸ்லாமியப் பெண்கள் தங்களின் தந்தை, சகோதரன் போன்ற ரத்த உறவுகளுடன் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு, 4 பெண்கள் இணைந்து பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது பாராட்டத்தக்கது.
புதிய ஹஜ் வரைவு விதிகள் எதிர்மறையான பாதிப்புகளைக் மட்டுமே ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஹஜ் பயணத்திற்கு பெண்களை அனுமதிப்பது தவிர்த்து மீதமுள்ள அனைத்து புதிய விதிகளையும் முன்பிருந்த நிலையிலேயே தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்று தெரிவித்துள்ளார்.