``ஹஜ் மானியம் ரத்து``-மு.க.ஸ்டாலின் கேள்வி?
ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளர்.
உலகமெங்கும் இருந்து இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது வழக்கம். இஸ்லாமிய மக்களின் 5 கடைமகளில் ஒரு கடமையாக ஹஜ் புனிதப்பயணம் கருதப்படுகிறது.
ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ரத்து செய்யப்பட்ட மானியத் தொகையினை பெண் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை செல்லும் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து ஸ்டாலின் இன்று கேள்வி எழுப்பியுள்ளர்.
அவர் கூறியதாவது: தமிழக விவசாயிகளின் நலன் சார்ந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சுணக்கம் காட்டும் அரசு ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்வதில் இவ்வளவு வேகம் காட்டுவதேன் என்றார்.
"ஏழை – எளிய, நடுத்தர மக்களுக்கான மான்யங்கள் பலவற்றை ஏதேனுமொரு சாக்குபோக்கு சொல்லி, சிறிது சிறிதாக ரத்து செய்துவரும் மத்திய பாஜக அரசு, தற்போது ஹஜ் பயணிகளுக்கான பயண மான்யத்தையும் ரத்து செய்துள்ள பிற்போக்கு நடவடிக்கைக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த அப்தாப் அலாம் மற்றும் ரஞ்சன பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, “அரசியல் சட்டத்தின்படி ஹஜ் மான்யம் சட்டபூர்வமானது”, என்று கூறியிருந்ததை மத்திய பா.ஜ.க. அரசு, வசதியாக மறந்து விட்டதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற பாதையிலிருந்து நாட்டை பின்னடைவு உண்டாக்கும் வேறு திசையில் மத்திய அரசு அழைத்து செல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். எனவே ஹஜ் பயணிகளுக்கு மானியம் ரத்து செய்யப்பட்டுள்ள அறிவிப்பை, மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.