மணல் திருட்டு குறித்து தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
தமிழ்நாடு முழுவதும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது, கடந்த 5 ஆண்டுகளில், எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? என்று, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி...
தமிழ்நாடு முழுவதும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது, கடந்த 5 ஆண்டுகளில், எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? என்று, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி...
புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளாறு, அக்னி ஆறு, குண்டாறு, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாகவும், இதை தடுக்க, முக்கியச் சாலைகளில் சிசிடிவி கேமிராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த பொதுநல வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் மணல் எடுத்து செல்லும் லாரிகளின் எடையை கணக்கிட எடை மேடை அமைக்கப்பட்டுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மணல் லாரிகளை கண்காணிக்கவும், மணல் திருட்டை தடுக்கவும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதா? என வினவினர். மணல் திருட்டு, மற்றும் மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் என்ன? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மணல் கடத்தல் குறித்த வழக்குகளை விசாரிக்க ஏதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்றும், கடந்த 5 ஆண்டுகளில், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் நிலவரம் என்ன? என்றும் நீதிபதிகள் வினவினர்.
தமிழ்நாட்டிலிருந்து, பிற மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுகிறதா? என்றும், மணல் திருட்டை தடுப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு, தமிழ்நாடு அரசு, பொதுப்பணித்துறைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வருகிற 15ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.