கடந்த மாதம் செந்தில் பாலாஜி உறவினர்கள் வீட்டில் நடந்த சோதனையை தொடர்ந்து நேற்று சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.  இதில் பல ஆவணங்கள் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  செந்தில் பாலாஜியை இரவு கைது செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் வழியில் அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தயார் ஆகி வருகின்றனர்.  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இஎஸ்ஐ மருத்துவக்குழு மருத்துவர்களும் பரிந்துரை செய்துள்ளனர்.  இந்நிலையில், செந்தில் பாலாஜி மனைவி மேகலா மருத்துவமனையிலிருந்து கிளம்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறாரா செந்தில் பாலாஜி? அமலாக்கத்துறையின் ப்ளான் என்ன?


காலை முதல் முக்கிய அமைச்சர்கள், முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் போன்றோர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.  விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின்அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை கொடுத்துள்ளார்.  தன்வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லிஇருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன். அத்துமீறி- அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள் என்று கூறி இருந்தார். 


அரசியல் எதிரிகள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை வேட்டைநாய்களைப் போல ஏவி விடுவது ஒன்றிய பாஜக அரசின் வழக்கமாக இருந்து வருகிறது. அரசியல் சட்டத்தையும் மாநில உரிமைகளையும் ஒன்றிய அரசு காலில்போட்டு மிதித்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.  இது அமலாக்கத் துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். ஒன்றிய அரசின் அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடாகவே இச்செயல் அமைந்துள்ளது. இந்த கைது நடவடிக்கையும். தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் எதேச்சதிகாரத்தின் உச்சமாக உள்ளது. இத்தகையை நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் வலிமையடையலாம் என்ற பாஜகவின் கனவு நனவாகாது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ச ம உ வெளியிடும் அறிக்கை விடுத்துள்ளார்.


2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது பா.ஜ.க.வுக்கு மிகக் கடினமானதொரு நிலை என்று பா.ஜ.க. அரசு வட்டாரமும் - அதிகார மய்யங்களும் உணர்ந்திருப்பதால்  அதன் தோல்வி பயத்தின்காரணமாகவே, வலுவான எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆட்சி - அமைச்சர்களைத் தம்மிடம் உள்ள ‘திரிசூல’மான சி.பி.அய்., வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளை முழு வீச்சில் பயன்படுத்தி,   தி.மு.க. போன்ற கட்சிகளை அச்சுறுத்தும் வகையினைக் கையாளத் துவங்கியுள்ளதற்கு எடுத்துக்காட்டுதான் - தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட வருமான வரித்துறை, அமலாக்கத் துறை சோதனைகள் ஆகும். அதன் மூலம் அவருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மன உளைச்சல் -  உடல் நலப் பாதிப்பு ஆகியவை அப்பட்டமான மனித உரிமைகள் பாதிப்பும் ஆகும் என்று செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை கொடுத்துள்ளார். 


மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி கைது? நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ