சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக புவியரசன் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதேவேளையில், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.


கடந்த 24 மணி நேரத்தில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 14 சென்டிமீட்டரும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 13 சென்டிமீட்டரும், திருத்தணியில் 11 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


தென்மேற்குப் பருவமழை அடுத்த 10 நாட்களுக்குப் பிறகு, அதாவது அக்டோபர் முதல் வாரத்திலேயே முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.


சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்பட வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.