கர்நாடகாவை தண்ணீர் திறக்க வைத்த கனமழை..! காவிரியில் கரைபுரண்டு வரும் 25 ஆயிரம் கனஅடி நீர்
Cauvery Water News : கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து சுமார் 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Cauvery Water News Tamil : காவிரியில் தண்ணீர் திறக்க மறுத்த கர்நாடகா, இப்போது கனமழை காரணமாக 25 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட்டுள்ளது. இதனால், கர்நாடகா - தமிழ்நாடு எல்லைப்பகுதியான ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளவான 84 அடியில் 83.43 அடி வரை நீர் நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியில் 106 அடி எட்டி உள்ளது.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம்! அதிர்ச்சியில் மக்கள்!
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 556 கன அடி உபரி நீர் என இரண்டு அணைகளில் இருந்து மொத்தம் 25 ஆயிரத்து 556 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நேற்று மாலை நேரத்தில் இருந்து தமிழக எல்லை பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால் நேற்று மாலை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி சிறிய அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன. மேலும், காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இன்று நீர்வரத்து மேலும் அதிகரிப்பு காரணமாக அருவி மற்றும் ஆற்றுப்பகுதியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் கடந்த சில வாரங்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பது தொடர்பாக மோதல்போக்கு இருந்து வந்தது. காவிரி ஒழுங்காற்றுக்குழு அண்மையில் நடந்த கூட்டத்தில்கூட தமிழ்நாட்டுக்கு கர்நாடக நீர் திறந்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அதன்படி, அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை நடத்திய கர்நாடகா காவிரியில் தினமும் 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் தான் கனமழை காரணமாக அதிக தண்ணீர் இப்போது திறக்க வேண்டிய சூழலுக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் - தேசிய முன்னேற்ற கழகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ