துப்பாக்கிச்சூட்டு குறித்து உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு கேள்வி
தூத்துக்குடியில் அனுமதி பெறப்பட்டுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா? துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னர்தான் அனுமதி பெறப்பட்டதா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி!
தூத்துக்குடியில் அனுமதி பெறப்பட்டுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா? துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னர்தான் அனுமதி பெறப்பட்டதா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22 ஆம் தேதி பொதுமக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பலர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் எஸ்.பி, துணை வட்டாட்சியர்கள் உட்பட 11 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தனர். இதை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு பற்றிய முழு விசாரணையை சி.பி.ஐ நடத்த வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதுகுறித்த வழக்கு விசாரணையின் போது, மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், அரசு மற்றும் காவல்துறையிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்த முறையாக அனுமதி பெறப்பட்டதா?. வாய்வழி அனுமதியா, இல்லை எழுத்து வழி அனுமதியா?. 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டபின், அதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா?. சமூக வலைதள முடக்கம்? என பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து, வழக்கின் விசாரணை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.