சென்னை தியாகராய நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் சென்னை சில்க்ஸ் என்ற ஜவுளி மற்றும் தங்க நகைக்கடையின்  புதிய கட்டட கட்டுமான பணிகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு மே மாதம் சென்னை தி.நகரில் இயங்கி வந்த சென்னை சில்க்ஸ் கடையின் 9 மாடி கட்டடம்  தீ விபத்துக்குள்ளாகி முற்றிலும் சேதமானது. இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருந்ததால் தமிழக அரசின் உத்தரவுப்படி இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. 


இந்நிலையில் தற்போது அதே இடத்தில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கட்டிடம் சி.எம்.டி.ஏ விதிகளுக்கு எதிராக கட்டப்பட்டு வருவதாகவும் இந்த புதிய கட்டிடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, எதன் அடிப்படையில் சென்னை சில்க்ஸ் கட்டடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என பல கேள்வி எழுப்பினர். மேலும் அனுமதி வழங்கப்பட்ட 20 நாட்களில் 40% கட்டுமான பணிகள் முடிவடைந்தது எப்படி? இது பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 


இந்த நிலையில் சென்னை சில்க்சின் புதிய கட்டுமானத்துக்கு தடை விதித்த நீதிபதிகள், இதுகுறித்து அடுக்குமாடி கட்டிடங்களை ஆய்வு செய்து வரும் ஆய்வு குழு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சென்னை சில்க்ஸ்-ன் புதிய கட்டட கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.