காடு திறந்தே கிடக்கின்றது என்பதற்காக மதுபாட்டில்களை தூக்கி அதனுள் எறியலாமா ?. நீலகிரி மட்டுமல்ல தமிழகத்தின் அத்தனை மலைவாசஸ்தலங்களுக்கு படையெடுக்கும் இளைஞர்கள் சிலர் மலையேறும் போதோ, மலையில் இருக்கும் போதோ, நன்றாக மது குடித்துவிட்டு அந்த பாட்டில்களை தூக்கி காட்டிற்குள் எறியும் கொடூரமான பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அந்த பாட்டில்கள் காட்டிற்குள் உலவும் வனவிலங்குகளுக்கு எவ்வளவு இடையூறாக இருக்கும் என்று தெரியுமா ?. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பீர் பாட்டில் யானையின் காலில் குத்தினால், அது உள்ளே நுழைந்து, சீழ்க்கட்டி, கால் புடைத்து, புழுக்கள் ஏறி, நடக்க முடியாமல் யானை மரத்தின் மீதோ, ஏதாவதொரு பாறையின் மீதோ சாய்ந்துகொள்ளும். ஒரு நாளைக்கு பல கிலோ மீட்டர் தூரம் கடந்து உணவுகளை உட்கொள்ளும் யானை, நகர முடியாமல், தண்ணீர் எதுவும் குடிக்க முடியாமல் 5 நாட்கள் மிகுந்த வலியோடு ஒரே இடத்தில் நின்றபடி உடல் மெலிந்து பெரும் துயரப்பட்டுச் சாகும். 5 நாட்களும் மெல்ல சாகும் அந்த யானையைச் சுற்றி வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு பீர் பாட்டிலை குடித்துவிட்டு ஆக்ரோஷமாக காட்டிற்குள் தூக்கி எறிவதன் மூலம், ஒரு காட்டின் அரசனுக்கு நாம் தரும் கொடூரமான தண்டனை இது. 


மேலும் படிக்க | விரட்டும் யானைகளை வீடியோ எடுக்கும் மோகம் அதிகரிக்கிறதா ? - உளவியல் பின்னணி என்ன ?


இவைதவிர, சிகரெட் பட்ஸ்களை தூக்கி வீசுவது, காட்டை நோக்கி அசிங்க அசிங்கமான சொற்களைக் கொண்டு வலுமுட்டும் அளவுக்கு கத்துவது, சாலையை கடக்கும் வனவிலங்குகளை ஹாரன் அடித்துத் துன்புறுத்துவது, விலங்குகள் முன்பு செல்ஃபி எடுப்பது என ஏகப்பட்ட வன்கொடுமைகளை நாம் காட்டின் மீது செலுத்திக் கொண்டிருக்கிறோம். காட்டின் அனுபவத்தை சுத்தமாக அறியாமல் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், நீலகிரி மாவட்ட நிர்வாகமும் களத்தில் இறங்கியது. சுற்றுச்சூழலைக் காக்க கடுமையான சட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 


அதன் ஒரு படியாக,  வனப்பகுதியில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், கடந்த 15-ம் தேதி முதல்மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 நிர்ணயித்து, காலி மதுபாட்டில்கள் மீண்டும் டாஸ்மாக் கடைகளால் பெறப்படுகின்றன. இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே வனப்பகுதியில் வீசப்பட்ட 33 டன் காலி மதுபாட்டில்களை வனத்துறையினர் சேகரித்தனர். அதாவது, மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக நிர்ணயிக்கப்படும். 


அந்த பாட்டில்களை மீண்டும் கடைகளில் திரும்பக் கொடுத்தால் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.  இதன்மூலமாக 80 சதவீத பாட்டில்கள் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கே திரும்பிவிடுகின்றன. ஒரு சிலர் காலி மதுபாட்டில்களை சாலையில் வீசிவிட்டு சென்றால்கூட, டாஸ்மாக் கடைகளில் கொடுத்தால் ரூ.10 திரும்ப கிடைக்கும் என்பதால், அதைப் பார்க்கும் வேறு சிலர் காலி மது பாட்டில்களை எடுத்து டாஸ்மாக் கடைகளில் கொடுத்துவிடுகின்றனர். நீலகிரியின் இந்த திட்டத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. நீதிமன்றம் மேற்கோள் காட்டி பிற மாவட்டங்களில் முயன்று பார்க்கலாமே என்று கேள்வி எழுப்பும்வரை.!


நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வன பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறுவதாகவும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளது. 


மேலும் படிக்க | காட்டுத்தீ...வெயில்...மிருகங்களின் தாகம்...! வனத்துறை சந்திக்கும் சவால்கள்


இதையடுத்து நீதிபதிகள், இந்த திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிகள் மற்றும் மலைவாசஸ்தலங்களில் ஏன் அமல்படுத்தக்கூடாது என்ற கேள்வியை முன்வைத்தனர். மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியரும், டாஸ்மாக் மேலாளரும் அதிரடி சோதனை மேற்கொள்ளுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். தற்போதுதான் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


தொடர்ந்து தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும், ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR