தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என மின்துறை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காற்றாலை மின்சாரத்தை காரணம் இன்றி பயன்படுத்தாமல் இருப்பதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த அறிவுறுத்தியது. ஆனால் காற்றாலை மின்சாரத்தை மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பயன்படுத்தவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தமிழகத்தில் மின் பற்றாக்குறை உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதா? அப்படியென்றால் அதை நிவர்த்தி செய்ய அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மின்வெட்டு ஏற்படும்பட்சத்தில் காற்றாலை மின்சாரத்தை ஏன் முழுமையாக பயன்படுத்த கூடாது? எனவும், காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தாததால் காற்றாலை மின்னுற்பத்தியாளர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறார்களா? என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


போதிய நிலக்கரியை இருப்பில் வைத்துக்கொள்ளததற்கு காரணம் வெளி மாநிலங்களில் இருந்து அதிக தொகைக்கு மின்சாரம் வாங்குவதற்காகவே என கூறப்படுவது உண்மையா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.


தொழில் நிறுவனங்கள் கனிசமாக பெருகி வரும் நிலையில் எதிர்கொள்ளவிருக்கும் மின்சார தேவையை சமாளிக்க திட்டம் ஏதும் உள்ளதா? மின்வெட்டு ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள அவர், மின்துறை செயலாளரும் மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவருமான முகமது நஸிமுதீன் இந்த கேள்விகளுக்கு உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்!