`தனித்துவ அடையாளங்களை சிதைத்தழிக்கிறது பாஜக` கொதித்தெழும் சீமான்
இந்தி திணிப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்தி திணிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் சீமான்,
"இந்தியைத் திணித்து, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா?
ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்திய ஒன்றியத்தில், அம்மொழிகளுக்குரிய முக்கியத்துவத்தை சரிவிகிதத்தில் தராது, இந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி எனும் ஆரிய மொழியை நிறுவ முயலும் பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது.
மேலும் படிக்க | Beast Vs KGF2: ரிலீசுக்கு முன்பே ‘கே.ஜி.எஃப்-2’வை வென்ற பீஸ்ட்!
ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தது முதல், பல்வேறு வடிவங்களில் இந்தியை மெல்ல மெல்லத் திணித்திட முயல்வதும், இறந்த சமஸ்கிருத மொழிக்கு உயிரூட்ட வேலைசெய்வதுமான பாஜக அரசின் போக்குகள், மண்ணின் மக்களுக்கெதிரான ஆரியமுகத்தையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
இந்தியாவிலுள்ள தேசிய இனங்களையும், அதன் தனித்துவ அடையாளங்களையும் முற்றாகச் சிதைத்தழித்து ‘இந்து’,’இந்தி’,’இந்தியா’ என ஒற்றையாட்சியை நிறுவி, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயலும் பாஜகவின் கொடுங்கோல் நடவடிக்கைகள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயல்களாகும்.
பாஜக அரசின் இந்தித்திணிப்பை இந்திய நிலப்பரப்பு முழுவதும் வாழும் ஒட்டுமொத்தத் தேசிய இனங்களும் ஏற்றாலும், தமிழ்நாடும், தமிழர்களும் எதிர்த்து நின்று சமரசமில்லாது சமர்புரிவோமெனப் பேரறிவிப்பு செய்து, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித்திணிப்பினால்தான் வங்காளதேசம் எனும் நாடு பிறந்ததெனும் வரலாற்றுச்செய்தியை நாட்டையாளும் பாஜகவின் ஆட்சியாளர்களுக்கு இத்தருணத்தில் நினைவூட்டுகிறேன்!"
என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | இந்தி மொழி சர்ச்சை - பாரதிதாசன் வரிகளை பதிவிட்ட ஏர்.ஆர்.ரகுமான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G