இந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், புதிய கல்வி கொள்கை குறித்து தி.மு.க. நேற்று தான் தீர்மானம் அளித்தது. இது தனது பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனக்கூறினார்.
இதனையடுத்து உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.,வின் தங்கம் தென்னரசு, மத்திய அரசு புதிய கல்வி குறித்து அமைத்த குழுவில் அதிகாரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். கல்வியாளர்கள் யாரும் இல்லை. இந்த கல்வி கொள்கை மாநில அரசின் நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பதிலளித்து பேசியதாவது:- புதிய கல்வி கொள்கை குறித்து மத்திய அரசு, மாநில அரசிடம் கருத்து கேட்டுள்ளது. தமிழகத்தின் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து பதில் அளிக்கப்படும்.
தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் எந்த வகையிலும் அனுமதிக்கப்பட மாட்டாது. இதற்கு எந்த வகையிலும் உதவி செய்யப்படாது. புதிய கல்வி கொள்கை வரைவின் சில உள்ளீடுகளை மட்டுமே மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதற்கு விரைவில் பதில் அனுப்பப்படும். மாநில அரசின் நலன், கல்வி,, கலாசாரம், உரிமைகள் பாதிக்காத வகையில் மத்திய அரசுக்கு பதில் அனுப்பப்படும். சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படும் எனக்கூறினார். இந்த கருத்தை தானும் ஏற்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.
இதனை வரவேற்பதாக கூறிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தனி தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் எனக்கூறினார்.