பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார். யார் காலில் விழுந்தார் என்பது நன்கு தெரியும்: அழகிரி
எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் மக்கள் நன்கு அறிவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் மக்கள் நன்கு அறிவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற காஷ்மீர் உரிமைப் பறிப்பு கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ‘வரலாறு தெரியாதவர்கள் காஷ்மீரை இந்தியாவோடு இணைத்துவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் பா.ஜ.கவிற்கு தலைவர்கள் என்று யாரும் இல்லை. அதனால்தான் காங்கிரஸ் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலைத் திருடிக்கொண்டார்கள் என்று கூறினார். காஷ்மீரை கலைத்தது போல் தமிழ்நாட்டை யூனியன் பிரதேசமாக மாற்றினால் சும்மா இருப்பீர்களா.. ஆனால், அதற்கும் அதிமுக கைக்கட்டி, தலை வணங்கி நிற்கும். சட்டத்தைப் படிக்காமலே அ.தி.மு.க எல்லா வற்றிக்கும் ஆதரவு கொடுக்கிறது என்று கடுமையாக சாடியிருந்தார்.
இதுக்குறித்து இன்று காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்த விட சேலம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த முதல்வர், ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது? அவரால் ஏதும் கிடைக்கவில்லை. அவர் பூமிக்குத்தான் பாரம் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
முதல்வரின் கருத்து காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதுக்குரித்து தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், திரு. ப.சிதம்பரம் அவர்கள் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை எப்படிப் பெற்றார் என்பதை வரலாறு அறியும். தனது திறமையான அணுகுமுறையின் காரணமாகவே, அவரை நோக்கி பதவிகளும், பொறுப்புகளும் வந்தன. என்றைக்கும் இவர் பதவிகளை தேடிப் போனதே இல்லை. பதவிகள் தான் இவரை தேடி வந்திருக்கின்றன.
ஆனால், எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எடப்பாடி அவர்களே, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாமென எச்சரிக்கிறேன்" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.