ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது
தமிழகத்தின் நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டங்கள் குறித்த 2 ஒப்பந்தங்கள் இன்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது.
நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பேசியதாலும், நெடுவாசல் போராட்டக் குழுவினர் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரை சந்தித்து பேசிய போது நல்ல முடிவு எட்டப்பட்டதாலும் சில இடங்களில் மார்ச் 9 ம் தேதியும், மற்ற இடங்களில் மார்ச் 25 ம் தேதியும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் குறித்த ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக உள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது தொடர்பாக டிவிட்டரில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார் அதில் அவர்:-
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களோடு மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. புதிய நிறுவனங்கள் எவற்றுடனும் ஒப்பந்தம் போடவில்லை.எனவே, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற செய்தியை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம்.நெடுவாசல் போராட்டக்குழுவினரிடம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளது போன்று, மக்களின் ஆதரவில்லாமல், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.