தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற நிலையில், மூன்று இடங்களில் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து அவர் கூறியதாவது:- 


காவிரி டெல்டா பகுதிகளில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.


ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, மக்கள் ஏகோபித்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” என்று கூறி ஏமாற்றி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது திடீரென்று மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது, தமிழக வேளாண்மை முன்னேற்றம் பற்றியோ, தமிழக விவசாயிகளின் பாதுகாப்பு பற்றியோ மத்திய அரசு துளியும் கவலைப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் துயரம் மறைவதற்குள், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி சுற்றுப்புறச்சூழலைக் கெடுத்து வரும் அதே வேதாந்தா நிறுவனத்திற்கு, மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க இடங்களை மத்திய அரசு ஒதுக்கியிருப்பது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை அடக்குவதில் மத்திய பா.ஜ.க. அரசும் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசுக்கு உறுதுணையாக இருந்து “அரச பயங்கரவாதத்தை” அப்பாவி மக்கள் மீது இரண்டு அரசுகளும் இணைந்து கட்டவிழ்த்து விட்டது உண்மையாகியிருக்கிறது.


விளை நிலங்கள், குடிநீர் ஆதாரங்கள், விவசாயிகளின் நலன், அப்பகுதியில் வாழும் மக்களின் சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து என்று வாழ்வாதாரத்திற்கும் உயிருக்கும் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பது கிஞ்சிற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும் அல்ல.


எனவே, வெகுமக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவரும் மத்திய பா.ஜ.க அரசு, தமிழக மக்களின் பெருந்திரள் போராட்டத்தையும் அடங்கா சினத்தையும் சந்திக்க வேண்டிய கட்டாயமான நிலை உருவாகும் என்று மிகுந்த அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆகவே, “தமிழகத்தின் நெற்களஞ்சியத்தினை” காப்பாற்றுவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு கருதியும் இத்திட்டத்தினை மத்திய பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


“தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியதை நினைவுபடுத்தி, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையை மத்திய அரசுக்கு வைக்க வேண்டும் என்று தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.