ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலாவின் 1600 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது வருமானவரித்துறை..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சசிகலாவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, வருமான வரித்துறை பினாமி பரிவர்த்தனைகள் தடைச் சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி கறுப்புப்பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அப்போது, செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்ற மக்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அந்நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலா தன்னிடம் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. 


பினாமி பெயர்களில் இந்த சொத்துகளை சசிகலா வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பரில் ஆப்பரேசன் கிளீன் மணி என்ற பெயரில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. அப்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதில் பினாமி சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டதாக சொல்லப்பட்டது.


மேலும், கார் டிரைவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட வீட்டுப் பணியாளர்களின் பெயர்களில் பினாமி சொத்துகள் வாங்கப்பட்டது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை, புதுச்சேரி, கோவை ஆகிய இடங்களில், சசிகலாவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் 9 சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால்,  புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட், கோவை செந்தில் பேப்பர்ஸ் அண்டு போர்ட்ஸ் என்ற பெயரில் உள்ள ஒரு சொத்து உள்ளிட்டவை முடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், வருமான வரித்துறையின் கீழ் வரும், பினாமி சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கும் பிரிவு, சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பான உத்தரவை சம்மந்தப்பட்ட சார் பதிவாளர்களுக்கும், கம்பெனிகள் பதிவாளருக்கும் அனுப்பியுள்ளது. சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு சசிகலா தரப்புக்கு 90 நாட்கள் அவகாசம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் முக்கிய செய்திகள் படிக்க....... Jayalalithaa T T V Dhinakaran