வைரமுத்துவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் - சின்மயி!
திரைதுறையில் நம்பிக்கை இல்லாததால் தான் சின்மயி திரைப்பட சங்கத்தில் புகார் அளிக்கவில்லை என இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!
திரைதுறையில் நம்பிக்கை இல்லாததால் தான் சின்மயி திரைப்பட சங்கத்தில் புகார் அளிக்கவில்லை என இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!
சென்னையில் இன்று தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், பின்னணிப் பாடகி சின்மயி, இயக்குநர் லீனா மணிமேகலை உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்தசந்திப்பின் போது #MeToo விவகாரம் குறித்தும், பெண் படைப்பாளிகளுக்கு திரைதுறையில் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பாடகி சின்மயி, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் பதில் அளித்தனர்.
இந்த சந்திப்பில் பாடகி சின்மயி பேசியதாவது... "வைரமுத்துவுக்கு எதிராக வழக்கு தொடர ஆவணங்களை சேகரித்து வருகிறேன். வைரமுத்து குறித்து எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதற்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். அவரைப்பற்றி பெண்களுக்கு தெரியும், ஆண்களுக்குத் தான் தெரியாது. #MeToo விவகாரத்தில் எத்தனை ஆண்கள், பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்?" என கேள்வி எழுப்பினார்.
மேலும் வைரமுத்துவால் எனக்கு நேர்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சட்டரீதியாக அணுக தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் 'திரைத்துறையில் இதற்கான புகாரை ஏன் அளிக்கவில்லை' என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகையில் இதற்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள்...
"MeToo இயக்கம் இல்லாத நிலையில் சின்மயி இந்த விஷயத்தைச் கூறியிருந்தால் இதை நீங்கள் எப்படி அணுகி இருப்பீர்கள், இதை திரைத்துறை சங்கத்தில் சொல்லியிருந்தால் அவர்கள் இதை உண்மையாக அணுகி இருப்பார்களா? நீங்கள் சொல்லுங்கள்" என கேள்வி எழுப்பினார். மேலும் திரை துறையில் நம்பிக்கை இல்லாததால் தான் இவ்வளவு நாட்கள் சின்மயி பேசவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.