13 ஆண்டு வரவு செலவை வெளியிடுகிறேன் - வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி
கடந்த 13 ஆண்டுகால வங்கி வரவு, செலவுகளை வெளியிடுவதாகவும், தனது மனைவி உள்பட குடும்பத்தினர் அனைவரின் வங்கி விவரங்களையும் வெளியிட உள்ளதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜகவின் சிறுபான்மை பிரிவு சார்பில் சென்னை கீழ்பாக்கத்தில் 'சமத்துவ கிறிஸ்துமஸ் விழா' கொண்டாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பல மதத் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அண்ணாமலை,"பாஜக சார்பில் சமத்துவ கிருஸ்துமஸ் விழா முதன் முறை நடக்கிறது. 1940ஆம் முதல் ஏதோவொரு காரணத்தால் அரசியலும், மதமும் இணைத்து விடப்பட்டது.
ஓட்டுக்காக இப்தார் நோன்பு
கிழக்கிந்திய கம்பெனி மத அடிப்படையில் மாநிலங்களை பிரித்தனர். பெங்கால் மாநிலத்தை மத அடிப்படையில் பிரிக்க ஷியாம பிரசாத் முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்தில் ஜன சங்கத்தின் முதல் தலைவர் கிறிஸ்தவரான வி.கே ஜான் என்பவர்தான்.
எமர்ஜென்சி காலத்தில் secular (மதசார்பின்மை ) என்ற வார்த்தையை புதிதாக கொண்டுவந்தனர். எது secular என்பதில் குழப்பம் விளைவித்தனர் . அவரவர் மத வழக்கத்தை , பாரம்பரியத்தை பின்பற்றுவதே மதசார்பின்மை.
இப்தார் போன்ற விருந்தில் ஓட்டுக்காகவும், போட்டோவுக்காகவும் , பத்திரிகையாளர்கள் முன்பு ஒரு மணி நேரம் மற்றொரு மத சடங்கை சுமக்க தொடங்கிய பிறகுதான் இந்தியாவில் மதத்தை வைத்து அரசியல் செய்வது தொடங்கியது. இப்தாரில் நானும் கலந்து கொண்டேன். ஆனால் ஓட்டுக்காக நான் நடிக்கவில்லை.
முத்தலாக் குறித்து அண்ணாமலை
பாஜகவிற்கு அனைத்து மதத்தில் இருந்தும் தலைவர்கள் வருவர், எந்த மதத்தையும் யார் மீதும் திணிக்க மாட்டோம். உடனடியாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை நிறுத்தியதால் பாஜக இசுலாமியர்களுக்கு எதிரான கட்சி என தமிழகத்தில் சில கட்சியினர் பேசுகின்றனர். இந்தியா இப்போதுதான் உடனடி முத்தலாக்கை நீக்கியுள்ளது. ஆனால் 1961இல் பாகிஸ்தான் எடுத்துவிட்டது.
மேலும் படிக்க | சொத்து விவரங்களை வெளியிட திமுக தலைவர்கள் தயாரா?... அண்ணாமலை கேள்வி
உடனடி முத்தலாக்கை நீக்கிய 23ஆவது நாடுதான் இந்தியா. ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், இந்தோனேசியாவில் உடனடி முத்தலாக் நடைமுறை முன்பே தடை செய்யப்பட்டுவிட்டது.
இங்கிருக்கும் சிலருக்கு புரிதல் இல்லை. புத்தகம் படிப்பதில்லை. உலகில் நடக்கும் எதையும் அவர்கள் தெரிந்து கொள்வதில்லை. கும்மிடிப்பூண்டிக்கும் சென்னைக்கும் இடையில் அமர்ந்து கொண்டு அரசியல் பேசுகின்றனர்.
செலவுகளை சொல்கிறேன்
பாஜக குறித்து சொல்லப்பட்ட ஒவ்வொரு பொய்களையும் களை எடுத்து வருகின்றோம். 2024இல் மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் பாஜக ஏற்படுத்தும். நான் கவுன்சிலரோ , ஊராட்சி மன்ற தலைவரோ , சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லை. அரசு பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தற்போது வருமானம் பெறவில்லை. ஆனாலும் என்னிடம் திமுக ஒரு கேள்வி கேட்டுள்ளது.
திமுகவினர் எனது உடைகள், கடிகாரம், கார் குறித்து கேள்வி கேட்பதை வரவேற்கிறேன். இதற்காகத்தான் ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கிறேன். இந்திய அரசியலில் யாரும் செய்யாததை ஒரு மாநிலத் தலைவராக நான் செய்ய உள்ளேன். தமிழகம் முழுவதும் விரைவில் பாஜக சார்பாக நடை பயணம் மேற்கொள்ள உள்ளேன். 234 தொகுதிகளுக்கும் நடந்து சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கோயில்களுக்கும் செல்ல உள்ளேன்.
எனது நடைபயணத்தை தொடங்கும்போது , நான் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான 2010-11ஆம் ஆண்டு முதல் எனது வங்கிக் கணக்கு நிதி விவரங்களை, மக்களுக்கு சமர்ப்பிக்க உள்ளேன். கடந்த 13 ஆண்டில் நான் செய்த அனைத்து செலவுகள், எனது வருமானம் குறித்து இணையதள வலைதளத்தில் நடைபயணம் தொடங்கும் முதல் நாளிலேயே பதிவு செய்ய உள்ளேன். ஐந்து ரூபாய் கொடுத்து நான் படத்திற்கு சென்றிருந்தாலும் அது பதிவாகி இருக்கும்.
மனைவியுடன் வெளியே செல்வதில்லை
எனது மனைவி என்னைவிட 7 மடங்கு அதிகம் ஊதியம் பெறுகிறார். அவரது ஊதிய விவரத்தையும் வெளியிட உள்ளேன். கட்சித் தலைவரான பிறகு நான் எனது மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்வதில்லை , ஒன்றாக குடும்ப திருமணங்களுக்கும் செல்வதில்லை. அரசியலுக்காக என் மீது வீசப்படும் சேறு அவர் மீது படக்கூடாது என்று அவருடன் சேர்ந்து நான் எங்கும் செல்வதில்லை .
தேர்தல் ஆணையம் 10% விவரங்களைத்தான் கேட்கும், நான் 100% விவரங்களையும் தெரியப்படுத்துகிறேன். ரஃபேல் விமானம் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று போலீஸ் அதிகாரியாக எதிர்பார்த்தவன், பல கூட்டங்களில் ரபேல் குறித்து பேசியுள்ளேன். எனவே ரபேல் நிறுவன கடிகாரத்தை நான் அணிந்துள்ளேன். சீனாவிற்கும் , பாகிஸ்தானிற்கு உளவாளிகளாக சில தமிழக அரசியல் கட்சியினரும் இருக்கின்றனர்.
கோபாலபுரம் குடும்பத்தை நான் மொத்தமாக எதிர்க்கிறேன், எனவே என் குடும்ப சொத்து விவரத்தையும் மொத்தமாக வெளியிட உள்ளேன். எனது அப்பா, என் அம்மா, என் உடன் பிறந்தோர், என் மனைவியின் வங்கிக் கணக்கு விவரங்களையும் வெளியிட உள்ளேன். எனது மனைவி குடும்பத்தினர் அனுமதி பெற்று அவர்களது வங்கி விவரங்களையும் வெளியிடுவேன்" என்றார்.
மேலும் படிக்க | ராகுல் காந்தியுடன் கை கோர்க்கிறார் கமல் ஹாசன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-participating-in-bharat-jogo-yatra-at-december-24-424831