எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடுத்திருப்பார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருத்தம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த ஜூலை 27 ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை ஏற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருடைய உடலை மெரினா கடற்கரையில் அண்ணாவின் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்வதற்கு தி.மு.க சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, தமிழக அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. அதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர்.


இந்த விவகாரம்குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், 'அண்ணா இருந்த போது கழகம் காத்திட வளர்த்த இரு தம்பிகள் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்.ஜி.ஆர் இருந்து கருணாநிதி இறந்திருந்தால், கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருக்கருகில் கிடத்தியிருப்பார்' என்று பதிவிட்டுள்ளார்.



அதற்கு முன்னதாக, கருணாநிதி குறித்து ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், 'நான், கருணாநிதியை அரசியல்வாதியாக அறிவதற்கு முன்னால், அவரை எழுத்தாளராக அறிந்திருந்தேன். அவர், எனக்கு தமிழ் ஆசிரியராக இருந்தார். பல நடிகர்களுக்கும் அவர் தமிழ் ஆசிரியராக இருந்தார். நாங்கள் (நடிகர்கள்) கருணாநிதியின் மொழியைப் பயன்படுத்தினோம். சிவாஜி கணேசனின் குரலைப் பயன்படுத்தினோம். கண்ணதாசனிடமிருந்து சொற்களைக் கற்றுக்கொண்டோம். இந்த மூன்று பேரும் பல நடிகர்களுக்கு தமிழ் ஆசிரியர்களாக இருந்தனர். அந்த மூன்று ஆசிரியர்களும் தற்போது நம்முடன் இல்லை. கடந்த 70 ஆண்டுகளாக, கருணாநிதி தமிழக அரசியலில் ஊடுருவி இருந்தார் என பேசியது குறிப்பிடத்தக்கது.