கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பு கொடுத்தால் சன்மானம் கொடுக்கப்படும் என காவல்துறை அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களின் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த திங்கள் வழக்கம் போல, பள்ளிக்குச் சென்ற சிறுமி, பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். மேலும், விடிய விடிய பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில், செவ்வாய் அதிகாலை கஸ்தூரிநாயக்கன் புதூர் பகுதியில் கத்தியால் அறுக்கப்பட்ட காயங்களோடு, சிறுமி பள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.


தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, குற்றவாளிகளை பிடிக்க தாமதிப்பதைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்கக் கோரியும் கோவை அரசு மருத்துவமனை முன்பு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 


இந்நிலையில், கோவை மாவட்டம், துடியலூர் அருகே 6 வயதுப் பெண் குழந்தை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் குறித்து துப்புக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், குற்றவாளிகள் குறித்து துப்புக் கொடுப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிப்பதால் காவல்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.