சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்றிரவு 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் கணேசன். இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள பேராசிரியர்கள் குடியிருப்பில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணேசனும் அவரது மனைவி விஜயலட்சுமியும் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் நடந்துள்ளது.


இதனால் மன அழுத்தத்தில் இருந்த விஜயலட்சுமி (வயது 47) நேற்றிரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதற்கிடையே ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி மாணவியர் விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் மகேஸ்வரி என்பதும், அவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி என்பதும் தெரியவந்தது. தற்போது தற்கொலை குறித்து விடுதியில் உள்ள மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது தொடர்பாக ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:- ஐஐடி ஆராய்ச்சி மாணவியின் மரணம் துரதிருஷ்டவசமானது. இது பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.