தங்கம் விலை உயர்வை சமாளிக்க இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.32,576 என்ற அளவுக்கு உயர்ந்திருப்பதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை நடத்தவுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.


சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 60 ரூபாயும், ஒரு பவுனுக்கு 480 ரூபாயும் அதிகரித்து ஒரு கிராமின் விலை ரூ.4072 ஆகவும், ஒரு பவுனின் விலை ரூ.32,576 ஆகவும் உள்ளன. கடந்த 12-ஆம் தேதிக்கு பிந்தைய 10 நாட்களில் மட்டும் ஒரு கிராமின் விலை 210 ரூபாயும், பவுனின் விலை 1680 ரூபாயும்  உயர்ந்துள்ளன. இந்திய வரலாற்றில் தங்க விலையின் உச்சம் இதுவாகும். தங்க விலை மின்னல் வேகத்தில் அதிகரித்திருப்பதும் இது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ஆம் ஆண்டின் குறைந்தபட்ச விலையான ஒரு கிராம் ரூ.2992, ஒரு பவுன் ரூ.23,936 என்ற அளவுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.8640 உயர்ந்துள்ளது.


சீனாவை வதைத்து வரும் கரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் தொழில் மற்றும் ஏற்றுமதி  துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் பங்கு சந்தையில் நிச்சயமற்ற நிலை நிலவி வரும் சூழலில், முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை வாங்கிக் குவித்து வருவது தான் இந்நிலைக்கு காரணம் ஆகும். உலக அளவில் சந்தைகள் நிலைத்தன்மைக்கு எப்போது திரும்பும்? எப்போது தங்கத்தின் விலை குறையும்? என்பது தெரியாத நிலையில், இடைப்பட்ட காலத்தில்  திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை செய்ய நிச்சயத்திருப்பவர்கள் தங்கம் வாங்குவதற்காக சில லட்சம் ரூபாய்களை கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். அதற்கு வசதியில்லாதவர்கள் வீட்டு  திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் தடைபடவும் வாய்ப்புகள் உள்ளன என்பது தான் கசப்பான உண்மை.


இதில் இன்னொரு உண்மை என்னவென்றால், ஆசியாவிலேயே இந்தியாவில் தான் தங்கத்தின் விலை அதிகம் ஆகும். இதற்கு காரணம் தங்கத்தின் மீது வசூலிக்கப்படும் அளவுக்கு அதிகமான  இறக்குமதி வரி தான். தங்கத்தின் மீது இறக்குமதி வரி வசூலிக்கும் கலாச்சாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இல்லை. 2012-13-ம் ஆண்டில் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை அதிகமாக இருந்த போது, தங்க இறக்குமதியை குறைக்க அதன் மீதான இறக்குமதி வரியை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தான் 2 விழுக்காடு என்ற அளவில் அறிமுகப்படுத்தி, படிப்படியாக  10% என்ற அளவுக்கு உயர்த்தினார். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைந்தவுடன் இறக்குமதி வரி நீக்கப்படும் என்று சிதம்பரம் அளித்த வாக்குறுதி காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.


தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தங்கம் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமின்றி, கடந்த ஆண்டு மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற உடன் தங்கம் மீதான இறக்குமதி வரியை 12.50% ஆக அதிகரிக்கப்பட்டது. இது தவிர ஜி.எஸ்.டி வரியாக 3% வசூலிக்கப்படுகிறது. அரசுத் தரப்பில் இந்த அளவுக்கு வரிகள் விதிக்கப்படும் நிலையில், நகை வணிகர்கள் தரப்பில் 3% முதல் 25% வரை சேதாரம் என்ற பெயரில் பணம் பிடுங்கப்படுகிறது.


அதாவது, ஒரு பவுன் தங்கம் ரூ.32,576க்கு விற்கப்படும் நிலையில், அதில் ரூ. 4072 இறக்குமதி வரியாகும். சராசரியாக 10% சேதாரம் வசூலிக்கப்படுவதாக வைத்துக் கொண்டால் அதற்கான தொகையாக  ரூ. 3257, ஜிஎஸ்டியாக ரூ.1076 ஆகியவையும் தங்கத்தின் விலையுடன் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக ஒரு பவுன் தங்க நகை வாங்க சராசரியாக ரூ.36,959 செலவிட வேண்டியிருக்கும். அதில் ரூ.8455 வரியாகவும், சேதாரமாகவும் செலுத்த வேண்டியிருக்கும். ஏழை மக்களும் கண்டிப்பாக  வாங்க வேண்டியதாக இருக்கும் தங்கத்தின் மீது இவ்வளவு வரிகளையும், சேதத்தையும் திணிப்பது  நியாயமல்ல. இது ஏழைகள் இல்ல திருமணத்திற்கு தடையாக இருக்கும். இது மாற்றப்பட வேண்டும்.


தங்கத்தின் மீதான இறக்குமதி வரி எதிர்பார்த்த பயனை தரவில்லை. மாறாக தங்கக் கடத்தலை ஊக்குவிக்கிறது. இது இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும். மாறாக, இறக்குமதி வரியை குறைத்து, தங்கக் கடத்தலைக் கட்டுப்படுத்தினால் அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் ஒரு பவுன் தங்கம் வாங்குவதற்கான செலவு ரூ.5000 வரை குறையும். இதைக் கருத்தில் கொண்டு தங்கம் மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்கவோ, கணிசமாக குறைக்கவோ அரசு முன்வர வேண்டும். அத்துடன் சேதாரம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளையையும் தடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.