சென்னை தியாகராயநகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு திரண்டு வந்த ஆதரவாளர்கள் தீவிர அரசியலுக்கு வரவேண்டும், புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தீபாவையும் அவரது கணவர் மாதவனையும் சந்தித்து உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்தனர். அதற்கு தீபா எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் முக்கிய முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 17-ம் தேதி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் தீபா புதிய கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி புதிய அறிவிப்பை வெளியிடுவதாகவும் தீவிர அரசியலில் குதிப்பேன் என்றும் தெரிவித்தார்.


இந்நிலையில் தீபா ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம் சென்னை அயனாவரத்தில் நேற்று நடந்தது. 


முன்னாள் எம்.பி. சேலம் அர்ஜீனன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், காதி கிருஷ்ணசாமி, விழுப்புரம் மணிகண்டன், அன்புசெல்வன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட 300  பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாளில் புதிய கட்சி தொடங்குவது குறித்து உறுதி செய்யப்பட்டது. 


தமிழகம் முழுவதும் கட்சி செயல்பாடுகளை முறைப்படுத்த உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 


இது குறித்து முன்னாள் எம்.எல்ஏ. மலரவன் கூறியதாவது:-


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி புதிய கட்சி தொடங்குவது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, தமிழகம் முழுவதும் தூர்வாறும் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 


சென்னை கோயம்பேட்டில் கட்சியின் தலைமை அலுவலத்தை திறப்பது எனவும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 


இவ்வாறு அவர் கூறினார்.