சுதந்திரத் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 449 திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைப்பெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது..


"இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்திய சுதந்திரத் திருநாள் அன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து, முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது சிறப்பு திட்டத்தின்படி நிதி வசதி மிக்க திருக்கோயில்களில் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 


இவ்வாண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் 449 திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் சேவார்த்திகளுக்கு திருக்கோயில்களில் காணிக்கையாகப் பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன.


மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். மேலும் சென்னை பெருநகரப் பகுதிகளில் நடைபெறும் இச்சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் மாண்புமிகு பேரவைத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளது!